நெல்லை: அதிமுக தற்போது சுயமாக செயல்படவில்லை. அதை இயக்குபவர்களே அதன் தலைமை குறித்து முடிவு செய்வார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுதொடர்பாக நெல்லையில் அவர், அளித்த பேட்டி: அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி நடத்தி ஆட்சி செய்தபோது மாநில நலனுக்காக ஒன்றிய அரசிடம் போராடினார். தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அரசு ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்தபோது அதை பெறுவதற்காக அண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல் ஜெயலலிதா காவிரி உரிமைக்காக ஒன்றிய அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். அவர்கள் கட்சி நடத்திய போது சுயமாக செயல்பட்டார்கள். ஆனால் இப்போது அதிமுகவில் அப்படி இல்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சுயமாக செயல்படவில்லை. அதிமுகவிற்கு தேவை ஒற்றை தலைமையா அல்லது இரட்டை தலைமையா என்பதையும் அக்கட்சியை இயக்குபவர்களே முடிவு செய்வார்கள். இயக்குபவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அக்னி பாதை திட்டத்தை இளைஞர்கள் ஏற்காததால் அது அக்னியாக மாறி தீப்பற்றி எரிகிறது. முப்படைகளில் 4 ஆண்டுகள் மட்டும் பணி என்பது இளைஞர்களை ஏமாற்றும் திட்டம். பாஜ தவிர இந்த திட்டத்தை அனைவரும் எதிர்க்கின்றனர். எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அக்னி பாதை திட்டம் குறித்து ராணுவ அதிகாரிகள் பேட்டி கொடுப்பது சரியான ஜனநாயக அணுகுமுறையல்ல என்றார்.