
ஐரோப்பிய குடியேறிகள் குழு ஒன்று, மக்கள் வசிக்காத கலாபகஸ் தீவுக்கு சென்று அங்கே சொர்க்கம் போல வாழலாம் என்று நினைத்தனர். ஆனால், அந்த ஆசை விரைவில் துயரமாக மாறியது.
இந்த உண்மையான ஆனால் விசித்திரமான கதையை ஜூட் லா மற்றும் அனா டி அர்மாஸ் நடித்துள்ள புதிய திரைப்படமான ஈடன் விவரிக்கிறது.
“பசிபிக் ஏதனில் நவீன ஆதாமும் ஏவாளும்”(“Modern Adam and Eve in Pacific Eden”), “ஏதேன் தோட்டத்தில் பைத்தியக்கார பேரரசி”(“Mad Empress in the Garden of Eden”), “தனியார் சொர்க்கத்தை உருவாக்கிய பெண்”(“The Insatiable Baroness Who Created a Private Paradise”) என்பன போன்ற தலைப்புச் செய்திகள் 1930களின் நடுப்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வந்த பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்தன.
ஆனால் “தனியார் சொர்க்கம்” என்று அழைக்கப்பட்ட அந்த தீவு, உண்மையில் வஞ்சகம், சூழ்ச்சி, இறுதியில் மர்மமான முறையில் காணாமல் போதல் ஆகியவற்றின் தளமாக மாறியது.
இதைத்தான் ரான் ஹோவர்டின் ஈடன் திரைப்படம் நாடகமயமாகக் காட்டுகிறது.
இதில், தனிமையை விரும்பும் மருத்துவரும் தத்துவஞானியுமான ஒருவர், நேர்மையான தம்பதியர், தன்னை “பரோனஸ்” என்று அழைத்துக் கொண்ட ஆடம்பரமான பெண் ஆகிய பல கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கதையை 2012-ல் வெளியான ஆவணப்படமான The Galapagos Affair: Satan Came to Eden என்ற படத்திலும் காணலாம். இதை டேனா கோல்ட்ஃபைன் மற்றும் டான் கெல்லர் இயக்கியுள்ளனர். அந்த ஆவணப்படத்தில் உண்மையான அந்த நபர்களின் வாழ்க்கையை நேரடியாகப் பார்க்கலாம்.
பட மூலாதாரம், VERTICAL
“உயிர் பிழைத்தவர்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டது” என்ற வரிகளுடன் ஈடன் படம் தொடங்குகிறது.
ஆனால், அந்தக் குழுவில் சிலர் உயிர் பிழைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
மர்மம் நிறைந்த கதையைத் தாண்டி, நிஜ வாழ்க்கையில் இருந்த மனிதர்களை மனித இயல்பின் ஒரு சுவாரஸ்யமான சிறு உலகமாகவே பார்த்ததாக இயக்குநர் ரான் ஹோவர்ட் பிபிசியிடம் கூறுகிறார்.
“இந்த மக்கள் எங்களுக்கு புதுமையும் சுவாரஸ்யமும் நிறைந்த ஒரு புரிதலைத் தந்தார்கள்,” என்று அவர் சொல்கிறார்.
“அதில் சஸ்பென்ஸ், துரோகம், வன்முறை இருக்கிறது. சோகம் இருக்கிறது. அதே நேரத்தில் நகைச்சுவையும், மரியாதையும் இருக்கிறது. இவை அனைத்தும் கலாபகஸ் தீவில்தான் நடந்தது”என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இடம் கதைக்குப் பொருத்தமான பின்னணியாக இருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் கலாபகஸில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சார்ல்ஸ் டார்வின் கூறிய ‘தகுதியானவை பிழைத்து வாழும் ‘(survival of the fittest) என்ற கோட்பாடு, இந்த மக்கள் வேண்டுமென்றே செய்த மனித குறும்புகளுக்கு முன்னால் மிகவும் மென்மையானதாகவே தோன்றுகிறது.
நிஜத்தில், கலாபகஸில் உள்ள ஃப்ளோரியானா தீவுக்கு முதலில் வந்தவர் ஃபிரிட்ரிக் ரிட்டர் (ஜூட் லா). அவர் தான் அந்தத் தீவுக்கு வந்த முதல் நபராகப் படத்திலும் காட்டப்பட்டிருக்கிறார்.
1929-ல், அவர் தனது காதலியும், நெருக்கமான உதவியாளருமான டோர் ஸ்ட்ராச்ச் (வனேசா கிர்பி) உடன் ஜெர்மனியிலிருந்து அங்கு குடிபெயர்ந்தார்.
மனிதகுலத்துக்கு ஒரு புதிய எதிர்காலத்தை வழங்கும் தத்துவ நூலை எழுத வேண்டும் என்ற பெரிய கனவுடன், உலகத்தை விட்டு விலகிச் செல்லலாம் என்று அவர் எண்ணினார்.
அவருக்கு சில விசித்திரமான பழக்கங்கள் இருந்தன. உதாரணமாக, அவர் தனது எல்லா பற்களையும் பிடுங்கிக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, விட்மர் குடும்பம் அங்கு வந்ததும், ரிட்டர் மற்றும் டோர் வாழ்ந்த தனிமையான சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அந்தக் குடும்பத்தில் ஹெய்ன்ஸ் (டேனியல் ப்ரூல்), அவரது கர்ப்பிணி மனைவி மார்க்ரெட் (மிக எளிய தோற்றத்தில் சிட்னி ஸ்வீனி) மற்றும் அவர்களின் இளம் மகன் ஆகியோர் இருந்தனர்.
அந்தத் தீவுக்கு குடிபெயர்ந்து வாழும் ரிட்டர் பரிசோதனையைப் பற்றி ஹெய்ன்ஸ் ஜெர்மன் பத்திரிகைகளில் படித்திருந்தார்.
ஃபிரிட்ரிக் மற்றும் டோர் தங்கள் சொந்த ஊருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் ஃபிரிட்ரிக் எழுதிய கட்டுரைகள் செய்தியாக வெளியானதால், ஹெய்ன்ஸ் அவர்களின் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார்.
மேலும், தீவின் இயற்கைச் சூழல், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
அதிகரித்த பதற்றம்
ஃபிரிட்ரிக் மற்றும் டோர், புதிய அண்டை வீட்டாரை படையெடுப்பாளர்களாகவே பார்த்தனர்.
அதற்குப் பிறகு, தன்னை ‘பரோனஸ்’ என்று அழைத்துக்கொண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த எலோயிஸ் வெர்போர்ன் டி வாக்னர்-போஸ்கெட் (அனா டி அர்மாஸ்) தனது இரண்டு காதலர்களுடன் தீவுக்கு வந்ததும், சூழ்நிலை மேலும் பதற்றமாக மாறியது. அந்த இருவரில் ஒருவருக்கு அந்தப் பெண்ணிடம் அதிக ஆதரவு இருந்தாலும், இருவரும் அந்தப் பெண்ணின் கட்டுப்பாட்டில்தான் இருந்தனர்.
அந்தப் பெண்ணின் கடந்த வாழ்க்கை வதந்திகளால் சூழப்பட்டிருந்தது.
ஒருகாலத்தில் அவர் நடனக் கலைஞராக இருந்ததாகவும், ஃப்ளோரியானா தீவில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு சொகுசு ஹோட்டல் கட்ட திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
தனிமையில் வாழ விரும்பிய ரிட்டர் இதைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்பதை உங்களால் யூகிக்க முடியும்.
மறுபுறம், அந்தக் கரடுமுரடான தீவுக்கு, மின்சாரம், குடிநீர் குழாய் வசதி, அதைவிட சொகுசு வாழ்க்கை முறையை எப்படி கொண்டு வரலாம் என்பது குறித்த அந்தப் பெண்னின் கற்பனை ஒரு தனிக்கதையாக இருந்தது.
ஹோவர்டின் படத்தில், பரோனஸ் ஒரு நீண்ட பட்டு ஆடையை அணிந்து, தனது இரண்டு காதலர்களின் தோள்களில், ஒரு தெய்வம் போல கரைக்கு வருகிறார்.
இந்தப் படம் கதாபாத்திரங்களையும் சூழலையும் நம்பகத்தன்மையுடன் மீண்டும் உருவாக்கியிருந்தாலும், “உண்மையில் சில இடங்களில் அந்தக் கதாபாத்திரங்களின் தன்மையை சற்று மாற்றி அமைத்திருக்கிறோம் ,” என ஹோவர்ட் விளக்குகிறார்.
“அந்தப் பெண் தன்னை வெளிப்படுத்திய விதத்தில் அனா டி அர்மாஸ் பரோனஸாக முழுமையாகவும், மிகுந்த நாடகத்தன்மையுடனும் நடித்திருந்தால், அது வரம்பை மீறுவது போல தோன்றிவிடும் என்ற கவலை எங்களுக்கு இருந்தது”என்கிறார் ஹோவர்ட்.
பட மூலாதாரம், Doheny Library Collection at USC
அந்தப் பெண்ணும் அவருடைய காதலர்களும், விட்மர் குடும்பத்துக்கு கேட்கும் தூரத்தில் சத்தமாக விருந்து நிகழ்வுகளை நடத்துவார்கள்.
அதன் பிறகு சில காலத்தில், அந்தப் பெண் சதி செய்து, ரிட்டர் தம்பதியையும் விட்மர் குடும்பத்தையும் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தினார்.
அது தேவையில்லாமல் சிக்கலை கிளறிவிட்டது.
“ரிட்டர் குடும்பமும் விட்மர் குடும்பமும் ஒருவரையொருவர் வெறுத்தார்கள்,” என்று கோல்ட்ஃபைன் கூறுகிறார்.
அதில் ஆச்சரியம் இல்லை. சுதந்திரமான மனப்பான்மை கொண்ட டோர், மார்க்ரெட்டைப் ‘ஹாஸ்ஃப்ராவ்’ (hausfrau- வீட்டைக் கவனித்துக் கொள்ளும் மனைவி) என்று அவமதித்தார்.
ஆனால், உண்மையில் டோரும் ஃபிரிட்ரிக்கின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார். மோசமான உறவாக அது மாறியிருந்தது.
மார்க்ரெட்டின் பிரசவ தேதி நெருங்கியபோது, அவர் உதவி கேட்டபோது, மருத்துவர் ரிட்டர் அதை திட்டவட்டமாக மறுத்தார்.
ஹோவர்டின் படத்தில், விட்மர் குடும்பம் வீடு கட்டுவதற்கு முன்பு வாழ்ந்த குகையிலேயே மார்க்ரெட் (சிட்னி ஸ்வீனி) தனியாகப் பிரசவிக்கிறார். காட்டு நாய்கள் சூழ்ந்தபோது, அவர் அலறுவதை படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
தி கேலபகோஸ் அஃபேர் ஆவணப்படத்தில் வரும் உண்மையான நபர்களைப் பார்த்தால், ஜூட் லா, மெலிந்தும் தீவிரமான தோற்றமுடைய ரிட்டருடன் ஒரு அளவுக்கு சமமாக இருக்கிறார் என்பதைக் காணலாம்.
அதே நேரத்தில், அனா டி அர்மாஸ் நடித்த பரோனஸுக்கு ஹாலிவுட் பாணியில் கூடுதல் பளபளப்பு கொடுக்கப்பட்டிருப்பதையும் தெளிவாக தெரிகிறது.
பட மூலாதாரம், Vertical
ஹான்காக், பரோனஸுடன் இணைந்து எழுதிய ஒரு குறும்படத்தை இயக்கினார். தி எம்பிரஸ் ஆஃப் ஃப்ளோரியானா (The Empress of Floreana) என பெயரிடப்பட்ட அந்த மௌனப்படம், ஆவணப்படத்திலும் இடம் பெற்றுள்ளது.
அதில் பரோனஸ், தன்னுடைய இயல்புடன் ஒத்துப் போகும் தி பைரட்டெஸ் (The Piratess) என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நிஜத்தில் அவரது காதலர்களில் ஒருவரான ராபர்ட் பிலிப்சன், ஹர் ஸ்வைன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், பரோனஸ் விரைவில் அவரை நிராகரித்து, கடற்கரையில் சிக்கித் தவித்திருந்த ஒரு புதுமணத் தம்பதியின் கணவரை கவர்ந்திழுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர், அந்தக் குறும்படத்தின் இயக்குநரும் ஹான்காக் குழுவின் உறுப்பினருமான எமெரி ஜான்சன்.
“பரோனஸ் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார். இது அவருக்கு ஒரு பெரிய, சிறந்த வாய்ப்புக்கான மேடையாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார்,” என்று கூறப்படுகிறது.
கோல்ட்ஃபைன் மற்றும் கெல்லர், அந்தக் காலத்தில் எழுதப்பட்ட ஏராளமான கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் ஆவணப்படத்தை உருவாக்கினர். அதேபோல், டோரின் நினைவுக் குறிப்பான Satan Came to Eden (1936) மற்றும் மார்க்ரெட்டின் Floreana: A Woman’s Pilgrimage to the Galapagos (1959) ஆகிய நூல்களையும் பயன்படுத்தினர். இதில், டோரின் வார்த்தைகளை கேட் பிளான்செட், மார்க்ரெட்டின் வார்த்தைகளை டயான் க்ரூகர் பேசுகிறார்கள்.
அந்த இரண்டு புத்தகங்களிலும் சில முக்கியமான சம்பவங்களைப் பற்றி முரண்பாடான விளக்கங்கள் இருப்பது பெரிய ஆச்சரியமல்ல.
உதாரணமாக, ஒரு மரணப் படுக்கைக் காட்சியை, ஒருவர் “மிக அமைதியானதும் மகிமையானதும்” என்று நினைவு கூர்கிறார். ஆனால் மற்றவர், அதே தருணத்தில் “என் கடைசி மூச்சால் உன்னை சபிக்கிறேன்” என்ற வரியும் இருந்ததாகக் கூறுகிறார்.

ஒரு நீடித்த மர்மம்
புளோரியானா தீவிலிருந்து காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை யாரும் அறியவில்லை. ஹோவர்டும் இதை ஒப்புக்கொண்டு, “இது ஒரு மர்மம். சில விஷயங்களை யாரும் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது” என்கிறார்.
ஆனால், அவரும் ஈடன் படத்தின் திரைக்கதை எழுத்தாளருமான நோவா பிங்க், திரைப்படத்துக்கு ஒரு திட்டமிட்ட முடிவை உருவாக்கியுள்ளனர்.
“உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் எடுக்கும்போதும், அது ஒரு திரைப்படமாகச் செயல்பட வேண்டும். எனவே, அதற்குத் தன்னுடைய சொந்த நிலைப்பாடு தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் ஹோவர்ட்.
திரைப்படத்தில் என்ன நடக்கிறது என்பது முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால், டிரெய்லரில் சில சுட்டிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவர் துப்பாக்கியை எடுக்கிறார், மற்றொருவர் கத்தியைப் பிடிக்கிறார், ” அடுத்த வருடம் இந்நேரம், நம்மில் ஒருவர் இங்கே இருக்க மாட்டார். என்னை நம்புங்கள்” என்று பரோனஸ் சொல்கிறார்.
அவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில், “எங்கள் முடிவு மிகவும் சாத்தியமானதாகவும், அதே நேரத்தில் சுவாரஸ்யமும், தீவிரமும் கொண்டதாக இருந்தது,” என்று ஹோவர்ட் கூறுகிறார்.
“அதற்குப் பதிலாக, சலிப்பான முடிவுகளை தேர்வு செய்யலாம். ஆனால் பல தேர்வுகளில், பார்வையாளர்கள் உணர்ச்சிகரமான அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதால், அந்த முடிவைத் தான் எடுத்தோம்,” என்றும் அவர் விளக்குகிறார்.
மேலும், “என்ன நடந்தது என்பதை ஊகிப்பது எளிது,” என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், இது ஒரு சிறுபான்மை குழுவின் கருத்து மட்டுமே.
பெரும்பாலான விளக்கங்கள், அந்த நிகழ்வுகளை “தீர்க்க முடியாத மர்மம்” என்ற வகையில் தான் விவரிக்கின்றன.
கோல்ட்ஃபைன் மற்றும் கெல்லர், தாங்கள் ஆவணப்படத்தை உருவாக்கியதிலிருந்து இதுவரை எந்த புதிய ஆதாரமும் வெளிவரவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
உயிர் பிழைத்தவர்கள் இப்போது யாரும் இல்லை. ஆனால் மார்க்ரெட் மட்டும் ஃப்ளோரியானா தீவில் வயதாகும் வரை வாழ்ந்தார்.
பட மூலாதாரம், Doheny Library Collection at USC
1997-ஆம் ஆண்டு, இதனோடு தொடர்பில்லாத ஒரு திட்டத்துக்காக, கலாபகஸ் தீவுக்கு வந்திருந்த கோல்ட்ஃபைன் மற்றும் கெல்லர், அவர் இறக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ரெட்டைச் சந்தித்தனர்.
அங்கு காணாமல் போனவர்களின் கதையைப் பற்றித் தெரிந்திருந்தாலும், அவர்கள் ஆவணப்படம் எடுக்கத் திட்டமிடவில்லை. ஏனெனில் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் காப்பகத்தில் சிதிலமடைந்து கிடந்த ஹான்காக் படங்களை அவர்கள் அப்போது வரை கண்டுபிடிக்கவில்லை.
அப்போது மார்க்ரெட் 90 வயதைக் கடந்திருந்தார்.
தீவில் அவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவரின் மூலம், ‘1930களில் பத்திரிகைகளில் பெரிதாக பேசப்பட்ட அந்த சம்பவங்களைப் பற்றி பேசக்கூடாது’ என்ற நிபந்தனையின் கீழ், அவரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது.
மார்க்ரெட்டைப் பற்றி கோல்ட்ஃபைன் கூறும்போது, “அவர் ஒரு நல்ல, எளிமையான வயதான பெண்மணியைப் போலவே இருந்தார் . ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தீவுக்கு வந்த சம்பவம் போன்ற, தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிப் பேச விரும்பினார்,” என்று அவர் சொல்கிறார்.
ஆனால், தோற்றமளித்தை விட, அவர் சாமர்த்தியமாக இருந்திருக்கலாம் என்பது பின்னர் தெரிந்தது.
தேநீர் அருந்திவிட்டு அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கும்போது, “மூடிய வாய் மீது ஈக்கள் வராது” என மார்க்ரெட் திடீரென்று சொன்னார்.
“அது, தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக அவர் வைத்திருந்த நாடகப் பாணியிலான பேச்சா என எனக்குத் தெரியவில்லை,” என்றார் கெல்லர்.
மேலும், “அந்த நேரத்தில், அந்த மர்ம நிகழ்வுகளைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. எனவே, எதையாவது தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான், அவர் எங்களோடு இப்படி விளையாடினார் என்று நினைக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையே ஹெய்ன்ஸும் மார்க்ரெட்டும் இறுதியில் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் ஃப்ளோரியானா தீவில் ஒரு சுற்றுலா ஹோட்டலைத் தொடங்கினர்.
இன்று வரை அந்த ஹோட்டலை அவர்களின் சந்ததியினரே நடத்தி வருகின்றனர்.
ஆனால், அது அவர்களின் பழைய எதிரியான பரோனஸ் கற்பனை செய்த அந்த ஆடம்பரமான ஹோட்டல் அல்ல.
ஈடன் ஆகஸ்ட் 22 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு