போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டு போகும், உதடுகள் வெடிக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
எனவே, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது நல்லது.
நீங்கள் குறிப்பிட்டதுபோல, வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா இலைகளுடன் குடிக்கலாம்.
நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோர் ஆக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவதும் செரிமானத்திற்கு நல்லது. உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர்வறட்சியைத் தவிர்க்கும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதய நோயாளிகளும், மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
மற்றபடி, குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும்.
தண்ணீர் குடிப்பதை நினைவில் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.