முதல் ஓவரிலேயே அசத்திய பும்ரா… ஆனாலும் அசராத இங்கிலாந்து!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாகவே அதிரடி பாணியைக் கையிலெடுத்து ஆடிவரும் இங்கிலாந்து அணியில், பென் டக்கெட்டும், ஸாக் க்ராவ்லியும் ஓப்பனிங் இறங்கினர்.
அவர்களுக்கு, உலகின் நம்பர் டெஸ்ட் பவுலர் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஸாக் க்ராவ்லியை 4 ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்துக்கு லிட்டில் ஷாக் கொடுத்தார் பும்ரா.
ஆனாலும், அதில் அதிர்ச்சியாக பென் டக்கெட்டும் போப்பும், இந்திய பவுலர்களை ஒருநாள் போட்டி போலக் கையாண்டனர்.

இதில், பெரும்பாலும் கேட்சைத் தவறவிடாத ஜடேஜா, பும்ரா வீசிய ஓவரில் பென் டக்கெட்டின் கேட்சைத் தவறவிட்டார்.
அதைத்தொடர்ந்து, பென் டக்கெட்டும், போப்பும் பவுண்டரிகளாக அடிக்க 22-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இங்கிலாந்து.
அதே ஓவரில் பென் டக்கெட் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து போப்பும் அரைசதம் அடித்தார்.
25 ஓவர்களுக்கும் மேலாக விக்கெட் விடாமல் இந்திய பவுலர்களின் பொறுமையைச் சோதித்துக்கொண்டிருந்த இந்த கூட்டணியை, 29-வது ஓவரில் பென் டக்கெட்டின் விக்கெட் மூலம் உடைத்தார் பும்ரா.
அடுத்த சில ஓவர்களிலேயே அதே பும்ரா ஓவரில் ஜோ ரூட்டின் சற்று கடினமான கேட்சை ஸ்லிப்பில் நின்ற ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இருப்பினும், ரூட்டை பும்ராவே 28 ரன்களில் அவுட்டாக்கினார். ஆனாலும், நிதானமாக ஆடிய போப் 125 பந்துகளில் சத்தமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.