இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் 20 லீக் போட்டிகள் நடக்கவிருக்கிறது. லீக் போட்டிகளின் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக புள்ளிகள் கொண்டுள்ள அணி தங்களுக்குள் விளையாடிய பின், அதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

நடைபெறவுள்ள மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளில், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் என மொத்தம் ஐந்து அணிகள் கலந்துகொள்ள உள்ளது. கடந்த சீசனை பெங்களூரு அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக ஆஷ் கார்டனர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக மெக் லானிங், உ.பி வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக தீப்தி ஷர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக ஸ்மிருதி மன்தனா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
தலைசிறந்த பேட்டிங் திறமைகளை கொண்ட கேப்டன் ஸ்மிருதி மன்தனா, சபினெனி மேகனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பலம் சேர்க்கிரார்கள். சிறந்த பந்து வீச்சாளராக விளங்கும் ஏக்தா பிஷ்த், ரேணுகா சிங் மற்றும் ஆல் ரவுண்டர்களான ஸ்ரேயங்கா பாட்டீல், நியூசிலாந்தை சேர்ந்த சோஃபி டிவைன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டி கிளார்க் மற்றும் அணியினர், ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர விளையாட்டு வீராங்கனைகளாக வலு சேர்க்கிறார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் அக்ஷிதா மகேஸ்வரி, ஆல் ரவுண்டர்களாக அதிகம் பங்களித்த அமலியா கெர் மற்றும் நடாலி ஸ்கிவர் ப்ருண்ட், பேட்டிங் திறமையால் அறியப்படும் யாஸ்டிகா பட்டியா, கீர்த்தனா பாலகிருஷ்ணன் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

கேப்டன் ஆஷ் கார்ட்னர் தலைமையில், ஆல் ரவுண்டரான ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா ஆகியோர் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் சார்பில் களம் காணும் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

வைரல் ஸ்டார் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், பந்து வீச்சாளரான ஷீகா பாண்டே ஆகியோர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் விளையாட உள்ளனர். சிறந்த பந்து வீச்சாளர்களான அருஷி ஜியோல், க்ரான்த்தி கௌர் ஆகியோரை உ.பி வாரியர்ஸ் அணியில் இணைந்துள்ளனர்.
RCB அணியின் திறம்வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஷா ஷோபனாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக நுஸத் பர்வீன் என்ற வீராங்கனையை அணியில் எடுத்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியிலுள்ள பூஜா வஸ்த்ராகருக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக பருனிகா சிசோடியா என்பவரை மாற்று வீராங்கனையாக எடுத்துள்ளனர்.

பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டிகளில், ஜெஸ் ஜோனாசென், மரிசான் கேப், டியான்ட்ரா டாட்டின், மெக் லானிங், ஹேலி மேத்யூஸ், ஷப்னிம் இஸ்மாயில், அலனா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் போன்ற திறமை வாய்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டும் ஹாட்ஸ்டாரில் காணலாம்.!
இந்தியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வுமன்ஸ் ப்ரீமியர் லீக் சீசனும் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் புலிப்பாய்ச்சலை கொடுக்குமென நம்புவோம்.!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play