1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஜொலித்தார். அது நடந்து அடுத்த 12 ஆண்டுகளில், அதாவது 2000-ம் ஆண்டு மொத்தம் ஐந்து கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா பார்த்திருந்தது. அடுத்த 12 ஆண்டுகளில், 2012-ல் இது 29 ஆக இருந்தது. 2024-ல் இது 85 ஆக உயர்ந்திருக்கிறது. வியக்க வைக்கிறதல்லவா?! இப்போதுள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர், அதாவது 48% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதிலேயே தெரியும் எந்தளவு ஆனந்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பது.
இந்தியாவில், குழந்தைகள் செஸ்ஸை நோக்கி நகர்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெற்றோர்களும் அவர்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். பள்ளியின் இணைச் செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக செஸ் இடம்பிடித்துள்ளது. தனி வகுப்புகளுக்கும் மாணவர்கள் செல்கிறார்கள். 2022-ல் சென்னையில் பல சவால்களையும் தாண்டி நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட், இன்னமும் அதிகளவிலான ஆர்வத்தை சிறார்களிடையே தூண்டியுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 200-ஐ எட்டாவிட்டால்தான் ஆச்சர்யம். தமிழகத்தில் உள்ள 31 கிராண்ட் மாஸ்டர்களும், பிரக்ஞானந்தா, வைஷாலி, முகேஷின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றிகளும் பலரையும் செஸ்ஸை நோக்கி ஈர்க்கும்.
பெண்கள் படை!
பெண்கள் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றிருக்கிறது இந்தியப் பெண்கள் படை. ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சச்தேவ் என அவர்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக, வந்திகா மற்றும் திவ்யா தேஷ்முக் இருவரது இணையில்லாத ஆட்டம் தங்கத்தை இந்தியாவின் வசம் சேர்த்தது. அதுவும், இந்தியாவின் முதல் நிலை வீரரான கோனேறு ஹம்பி இல்லாமலேயே இதனைச் சாத்தியமாக்கி இருக்கிறது மகளிர் படை.
வெல்கம் நவம்பர்!
2025-ம் ஆண்டை சமூக செஸ் ஆண்டாக அறிவித்திருக்கும் சர்வதேச செஸ் ஃபெடரேஷன், ஆன்லைன் செஸ் உட்பட பலதரப்பட்ட நிலையிலான செஸ் போட்டிகளை அடுத்த ஆண்டு முழுவதும் திட்டமிட்டுள்ளது. இச்சூழலில், பிரபல செஸ் வீரரான ஹங்கேரியின் ஜுடித் போல்கர், பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கும் கிராண்ட் மாஸ்டர் டைட்டில்களை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். ’ஆண்களுக்கு சமமாக சவால் விடுமளவு நாங்களும் ஆயத்தமாக உள்ளோம்’ என்பதே அதில் உள்ள செய்தி.
மொத்தத்தில், செஸ் ஒலிம்பியாடில் வென்ற நட்சத்திரங்களை, முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியின் கடும் முயற்சிக்கான பலன் இது. அடுத்து… உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் குகேஷ், சீனாவின் டிங் லிரனை சந்திக்கப் போகும் த்ரில் நிமிடங்களைக் கொண்ட நவம்பர் மாதத்துக்காகக் காத்திருப்போம்.
சியர்ஸ் சாம்ப்ஸ்!