Pakistan Cricket : நீக்கப்பட்ட பாபர் அசாம்; சரியும் பாகிஸ்தான் – என்ன நடக்கிறது?

Share

‘ஒட்டுமொத்த தேசமும் ரசித்து பார்க்கும் ஒரே விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருக்கிறது. ஆனால், அதையும் இந்த அதிகார வர்க்கம் தங்களின் சுயலாபத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறது.’

பாகிஸ்தானின் அடியாலா சிறையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் இப்படி பேசியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் வெளியில் இருந்த சமயத்தில் அவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இதையேதான் செய்துகொண்டிருந்தார். பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் இப்படித்தான் எதிர்வினையாற்றின.

Imran Khan

அரசியல்… அரசியல்… எல்லாவற்றிலும் அரசியல் என்கிற நிலையை எட்டி ஒரு பெரும் வீழ்ச்சியை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் முகமாக பார்க்கப்பட்ட பாபர் அசாமையே இப்போது அணியிலிருந்து நீக்கிவிட்டு, ஓய்வளித்திருக்கிறோம் என சப்பைக் கட்டு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது?

சொதப்பல்… சரிவு…

கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதுவுமே சிறப்பாக நடக்கவில்லை. கடைசியாக 2017 இல் சாம்பியன்ஸ் டிராபியை அந்த அணி வென்றிருந்தது. 2021 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இவை இரண்டும் மட்டும்தான் அவர்களின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கான சாதனை. இந்தியாவில் நடந்த 2023 ஓடிஐ உலகக்கோப்பையில் கடுமையாக சொதப்பியிருந்தார்கள். சேப்பாக்கத்தில் வைத்து ஆப்கானிஸ்தான் அணியிடம் அடி வாங்கியிருந்தார்கள். அரையிறுதிக்கு கூட அந்த அணியால் முன்னேற முடியவில்லை. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் கிரிக்கெட் வரைபடத்தில் சிறுபுள்ளியாகக் கூட இல்லாமல் இருந்த அமெரிக்காவிடம் தோற்றார்கள். அயர்லாந்துக்கு எதிராகவும் தோல்வி தொடர்ந்தது. முதல் சுற்றோடு வெளியேறினார்கள்.

டெஸ்ட்டிலும் பயங்கர அடி. 2022 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னமும் பாகிஸ்தான் அணி உள்ளூரில் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக உள்ளூரிலேயே ஒயிட் வாஷ் ஆகியிருந்தார்கள். இப்போது மீண்டும் உள்ளூரிலேயே இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் எடுத்தும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உள்ளூரில் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக வெற்றியையே ருசிக்கவில்லை.

சறுக்கிய பாபர் அசாம்

இதன் பின்னணியில்தான் பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் புதிதாக சில உறுப்பினர்களை வேகவேகமாக சேர்த்து பாபர் அசாமை அணியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். பாபர் அசாம் ஏறக்குறைய கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட்டில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

Babar

அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு இதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். ஆனால், பாபர் அசாம் மாதிரியான ஒரு தலைமுறைக்கான வீரரை ஃபார்மையெல்லாம் கடந்துதான் ஒரு அணி பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ராக்கெட் வேக வீழ்ச்சிக்கும் தடாலடி மாற்றங்களுக்கும் பின்னால் ஒரு நிர்வாகக் குளறுபடியும் சீர்கேடும் ஒழிந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. ஓர் அணியை நிர்வகிக்கும் கிரிக்கெட் போர்ட் எந்தளவுக்கு திறன் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே அளவுக்குதான் அந்த அணியும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும். தகுதிச்சுற்றில் ஆடும் நிலைமைக்கு இலங்கை அணி சென்றதற்கும் உலகக்கோப்பையில் ஆட முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்ததற்கும் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளும் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது.

கிரிக்கெட் போர்டின் ஊசலாட்டம்:

பாகிஸ்தானின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கும் அதன் கிரிக்கெட் போர்டின் நிலையற்ற தன்மைதான் பிரதான காரணம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மூன்று சேர்மன்கள் மாறியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சீட்டை கலைத்துப் போட்டு ஆடுகிறார்கள். எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்துவதற்குள் மீண்டும் இன்னொருவர் வந்து குட்டையைக் குழப்புவார். அந்நாட்டின் இப்போதைய உள்துறை அமைச்சர்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சேர்மனும் கூட. பிப்ரவரியில் இவர் பதவியேற்ற சமயத்தில் அணிக்கான தேர்வுக்குழுவில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். டி20 உலகக்கோப்பை போட்டியில் படுமோசமாக தோற்ற போது மீண்டும் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்தார். அப்துல் ரசாக்கையும் வஹாப் ரியாஸையும் தேர்வுக்குழுவிலிருந்து தூக்கியெறிந்தார். இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியை அடைந்த சமயத்தில் மீண்டும் தேர்வுக்குழுவில் மாற்றம். அலீம் தர் போன்ற நடுவரையெல்லாம் உள்ளே கொண்டு வந்தார். மாற்றம்…சீரமைப்பு என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 26 நபர்களை அணியை தேர்வு செய்யவிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் என்ன டிசைன் என்றே புரியவில்லை.

Pakistan

மீண்டும்… மீண்டும்… கேப்டன்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பாபர் அசாம் எத்தனை முறை கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்? எத்தனை முறை மீண்டும் கேப்டன் ஆனார் என்பது அவருக்கே கூட தெரியாது. அந்த மன உளைச்சலே அவருடைய ஃபார்மை கெடுத்திருக்கும். இப்போது அவரையே அணியிலிருந்து நீக்கியும் விட்டார்கள். ஷாகின் ஷா அப்ரிடியை கேப்டன் ஆக்கினார்கள். ஆசைக்கு ஒரு சீரிஸ் மட்டும் கொடுத்துவிட்டு அவரையும் பதவி விலக வைத்தார்கள். இப்போது அவர் தானாகவே முன்வந்து எனக்கு ஓய்வு தேவை என கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகியிருக்கிறார். இப்போதைய டெஸ்ட் கேப்டனான ஷான் மசூத்தின் உச்சந்தலையை உரசிக் கொண்டிருக்கிறது அவர் தலைக்கு மேல் தொங்கும் கத்தி. அவரையும் எப்போது தூக்கிக் கடாசுவார்கள் என்பது தெரியாது.

பயிற்சியாளர்கள் விஷயத்திலும் இதேதான். கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 9 பயிற்சியாளர்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். மற்ற அணிகள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பயிற்சியாளரின் கீழ் பயணிக்க பாகிஸ்தான் மட்டும் ஒரு சில மாதங்களுக்கு ஒரு பயிற்சியாளர் என பயணித்துக் கொண்டிருக்கிறது. பாபர் அசாமை அணியிலிருந்து நீக்கும் முடிவை ரெட் பால் பயிற்சியாளரான கில்லிஸ்பையிடம் கலந்தாலோசித்து எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடக்கிற குளறுபடிகளையெல்லாம் கண்டு கில்லிஸ்பையும் கேரி கிறிஸ்டனும் கூட தலைதெறிக்க அணியிலிருந்து தப்பி வந்தாலும் ஆச்சர்யமில்லை.

Pakistan

உள்ளூர் தொடர்களிலும் கன்னாபின்னாவென மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் துறைவாரியாக அங்கு நடந்துகொண்டிருந்த உள்ளூர் தொடர்களை ரத்து செய்திருந்தனர். கிட்டத்தட்ட 32 அணிகளோடு ஆடப்படும் உள்ளூர் தொடர்கள் அது. அதன்பிறகு வெறும் 6 அணிகளோடு ஆடப்படும் தொடர்களை அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் மீண்டும் துறை வாரியான அணிகளையும் உள்ளே கொண்டு வந்து தொடரின் வடிவத்தை மாற்றினார்கள். இப்போது சாம்பியன்ஸ் தொடர் என்ற பெயரில் புதிதாக சில உள்ளூர் தொடர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வழக்கம்போல எதிலும் நிலைத்தன்மை கிடையாது. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல், அதிகார அகங்காரம் இதெல்லாம் அரசியலின் விஷ நாக்குகள். அது விளையாட்டையும் தீண்டினால் என்னவாகும் என்பதற்கு உதாரணம்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com