மழையின் பாதிப்பால் டிராவில் முடிந்திருக்க வேண்டிய ஒரு போட்டியை தங்களின் சமயோஜிதத்தாலும் துணிச்சலான ஆட்டத்தாலும் ஏறக்குறைய இரண்டே நாட்களில் வென்றிருக்கிறது இந்திய அணி. கான்பூரில் நடந்த டெஸ்ட்டை வென்றிருப்பதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என இந்திய அணி வென்றிருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் அட்டாக் மோடில் ஆடிய இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 50, 100, 150, 200, 250 என ஸ்கோர் செய்து வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலைப் பெற்று முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. நேற்றைய நாளில் போட்டி முடிய 45 நிமிடங்களே இருந்த நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 11 ஓவர்களை மட்டுமே இந்திய அணியால் வீச முடிந்தது. ஆனால், அந்த 11 ஓவருக்குள்ளாகவே இந்திய அணி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. அஷ்வின் மிகச்சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கடைசி நாளான இன்று வங்கதேச அணி எவ்வளவு நேரம் ஆட முடியுமோ அவ்வளவு நேரம் ஆடினால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும் என்ற நிலை. ஆனால், வங்கதேச அணியால் ஏறக்குறைய ஒரு செஷனுக்கு மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது.
36 ஓவர்களை இன்று எதிர்கொண்ட வங்கதேச அணி மேற்கொண்டு 120 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. ரோஹித்துடன் இணைந்து பௌலர்கள் ரொம்பவே டைட்டாக பீல்ட் செட் செய்து வங்கதேச வீரர்களை ஷாட் ஆட விடாமல் மடக்கினர். அதிகமாக ஸ்வீப் ஷாட் ஆடக்கூடிய மோனிமுல் ஹக்கிற்கு லெக் ஸ்லிப்பையும் ஷார்ட் லெக்கையும் வைத்து அட்டாக் செய்திருப்பார்கள். இந்த பீல்ட் செட்டிங்கையெல்லாம் வர்ணனையில் கவாஸ்கர் வியந்தோதினார்.

சிராஜை தவிர அத்தனை பௌலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். பும்ரா டெயில் எண்டர்களை புல்லட் மாதிரியான யார்க்கர்களால் துளைக்க வங்கதேசம் 146 ரன்களுக்கு ஆல் அவுட். இந்தியாவுக்கு 95 ரன்கள் டார்கெட். சவாலே இல்லாத டார்கெட். இந்த டார்கெட்டையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்திய அணி அடிக்க நினைத்தது. மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் இந்திய அணி எளிதில் டார்கெட்டை எட்டியது. டிராவில் முடிந்திருக்க வேண்டிய போட்டியை தங்களின் துணிச்சலான அணுகுமுறையால் சுவாரஸ்யமான போட்டியாக மாற்றி இந்திய அணி வெற்றியையும் பெற்றிருக்கிறது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருதையும், 11 விக்கெட்டுகள் + சதம் அடித்து அசத்தியிருந்த அஷ்வினுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.!