Ind vs Ban: 'அதிரடி வேட்டை நடத்தும் இந்தியா!' – முடிவை நோக்கி கான்பூர் டெஸ்ட்

Share

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டி டிராவை நோக்கியே நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு அணிகளுமே அதிரடியாக உத்வேகத்துடன் ஆடி போட்டியை முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் முனைப்பில் ஆடி வருகின்றனர்.

Rohit & Jaiswal

இன்றைய நாளின் தொடக்கத்துக்கு முன்பாக 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. வங்கதேச அணி 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வங்கதேசம் தொடர்ந்து பேட்டிங் ஆடி 233 ரன்களை எட்டியது. மோனிமுல் ஹக் சதம் அடித்து அசத்தியிருந்தார். அவரின் சதத்தின் விளைவாலேயே வங்கதேச அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஒன்றரை நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையிலும் இந்த டெஸ்ட்டை டிராவை நோக்கி நகர்த்த இந்தியாவுக்கு விருப்பமில்லை. அப்படி டிரா செய்தால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்டுவதில் பிரச்னை உருவாகும். அதனால் இந்திய அணி இந்த டெஸ்ட்டை எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் ஆடியது.

ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் டி20 போட்டியைப் போல ஆடியிருந்தனர். இந்திய அணியின் அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. அத்தனை வீரர்களும் க்ரீஸூக்குள் வந்த நொடியிலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் வங்கதேச கேப்டன் சாண்டோ 7 பீல்டர்களை பவுண்டரி லைனில் நிற்க வைத்த சம்பவமெல்லாம் நடந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 50, 100, 150, 200, 250 என அடித்து இந்திய அணி கலக்கியிருந்தது.

KL Rahul

285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் அரைசதம் அடித்திருந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்களையும், ராகுல் 43 பந்துகளில் 68 ரன்களையும் அடித்திருந்தனர். வங்கதேசம் சார்பில் ஸ்பின்னர்களான மெஹிதி ஹசனும் ஷகிப் அல் ஹசனும் சிறப்பாக வீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

52 ரன்கள் பின்னிலையோடு வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. இன்னும் முழுமையாக ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் எவ்வளவு அதிக நேரம் பேட்டிங் ஆட முடியுமோ அவ்வளவு அதிக நேரம் வங்கதேசம் பேட்டிங் ஆடினால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும் என்ற நிலை. ஆனால், வங்கதேசம் இன்றைக்கு எஞ்சியிருந்த 45 நிமிடங்களைக் கடப்பதற்குள்ளேயே 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டன.

Ashwin

சுவாரஸ்யமான கட்டத்திற்கு இந்த டெஸ்ட் நகர்ந்திருக்கிறது. கடைசி நாளில் தோல்வியைத் தவிர்க்க வங்கதேசம் போராடும். வெற்றிக்காக இந்தியா முனைப்போடு ஆடும். என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com