தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையில் தீபமும் ஒளியும் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் ஒலியும் காற்று மாசும் இருக்கும். அதிக சத்தத்தில் பட்டாசுகளை வெடிக்கவிட்டு ஒலி மாசை ஏற்படுத்துவதுடன் செல்லப் பிராணிகளையும் நடுங்க வைத்துவிடுகிறோம்.

அதே போல அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளைக் கொளுத்தி காற்று மாசை ஏற்படுத்துவது பலரின் உடல்நலத்தையும் மோசமாக்கிவிடுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டாசு புகை பிரச்னையைத் தீவிரப்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பட்டாசு புகையினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதிலிருந்து நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் திருப்பதி.

“பொதுவாகவே நம் நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி போன்ற நகரங்களில் தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பிலிருந்தே பட்டாசு புகை, வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை போன்ற பெருநகரங்களில் டெல்லியைப்போல அதிக காற்று மாசுபாடு இல்லை என்றாலும் கணிசமான மாசுபாடு காணப்படுவதை மறுப்பதற்கில்லை.

மாசடைந்த காற்றுடன் பட்டாசுப்புகை சேரும்போது காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவு நேரடியாக நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா, பிஓபிடி (Persistent Obstructive Pulmonary Disease) போன்ற பாதிப்புகள் இருப்பவர்களுக்கு பட்டாசுப் புகை ஒவ்வாமையை அதிகரித்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
மேலும் இருமல், மூச்சடைப்பு, அதிகமாக சளி உருவாகுதல் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். சில பட்டாசுகள் மிக அதிக அளவிலான புகையை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு பாம்பு மாத்திரை, மத்தாப்பு போன்றவை. இவையெல்லாம் சத்தத்துடன் வெடிக்கும் வகையைச் சேர்ந்த பட்டாசுகள் இல்லை என்பதால் உடலுக்கும் நல்லது என்று நினைக்கிறோம்.

அதிக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைவிட அதிக காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக அமைவது இந்த வகைப் பட்டாசுகள்தான். ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், அதிக நுரையீரல் பாதிப்புக்கு ஆக்ஸிஜன் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது மிகவும் நல்லது.
நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் வீட்டில் இருக்கும்போது மத்தாப்பு போன்ற அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளை கொளுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல நுரையீரல் பிரச்னை இருப்பவர்களும் பட்டாசுகள் கொளுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

ஒருவேளை பட்டாசு கொளுத்துவதாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்துக் கொளுத்தக்கூடாது. நல்ல காற்றோட்டமான இடத்தில் மட்டுமே கொளுத்த வேண்டும். நீண்டநேரம் பட்டாசு புகையில் இருப்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் தீபாவளி போன்ற அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் காலங்களில் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் தவறவிடக் கூடாது. மேலும் பிரச்னைக்கான நிவாரண மருந்து மற்றும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் என அனைத்தையும் கூடுதலாக கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் புகையை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் கொளுத்துவதைத் தவிர்த்துவிட்டு உறவினர்களோடு உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடலாம்” என்றார் அவர்.