Myth: மாதவிடாயின்போது உடலிலிருந்து லிட்டர் கணக்கில் ரத்தம் வெளியேறும்.
பொதுவாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சமயத்தில் 50 முதல் 80 மி.லி அளவு ரத்தம் உடலிலிருந்து வெளியேறும். மாதவிடாய் சமயத்தில் வெளியேறுவது ரத்தம் மட்டுமல்ல. கர்ப்பப்பையின் உள் அடுக்கான `எண்டோமெட்ரியம்” (Endometrium) மாதம்தோறும் புதிதாக உருவாகும். கருமுட்டைப் பையிலிருந்து வெளியேறும் கருமுட்டை, விந்தணுவைச் சந்தித்து அந்தப் பெண் கருவுற்றால் எண்டோமெட்ரியம் ஒவ்வொரு மாதமும் உருவாகி அப்படியே இருக்கும். கருவுறாத பட்சத்தில் நம் உடல் அதற்கேற்ற ஹார்மோன்களைச் சுரந்து அந்த அடுக்கை வெளியேற்றிவிடும். மாதவிடாய் சமயத்தில் வெளியேறுவதில் ரத்தம் வெறும் 35℅ மட்டுமே இருக்கும். மீதம் எண்டோமெட்ரியம் அடுக்கின் இறந்த செல்கள், செர்விக்ஸ், வெஜைனா பகுதிகளிலிருந்து சுரக்கப்படும் திரவங்கள் இவை அனைத்தும் சேர்ந்துதான் வெளியேறும்.
Myth: டாம்பூன், மாதவிடாய் கப் போன்றவற்றை பயன்படுத்தினால் ஹைமன் கிழிந்துவிடும். எனவே, திருமணமாகாத இளம்பெண்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது.
ஹைமன் என்பது வெஜைனல் திறப்புப் பகுதியில் இருக்கக்கூடிய எலாஸ்டிக் தன்மையுடைய மெல்லிய தசை. ஹைமன் வெஜைனாவை முற்றிலுமாக மூடி இருக்காது, பாதி மூடிய நிலையில்தான் இருக்கும். மென்ஸ்ட்டுரல் கப், டாம்பூன் போன்றவற்றை உபயோகிக்கும்போது மிகவும் பொறுமையாகக் கையாண்டால் ஹைமன் அடுக்குக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தத் தசை, உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, சைக்கிள் ஓட்டுவது, உடலுறவு போன்றவற்றால் கிழியலாம். எனவே, குறிப்பிட்ட வயதினர்தான் டாம்பூன், மாதவிடாய் கப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எந்த வயதிலும் அதை உபயோகிக்கும் பெண்ணின் சௌகர்யமே முக்கியம்.