தங்களது கடைக்கு கஸ்டமர் அதிகம் வரவேண்டும் என்பதற்காக கடையின் உரிமையாளர்கள் போட்டிகளை நடத்துவதுண்டு. அந்தவகையில் டெல்லியின் ஒரு ஸ்ட்ரீட் ஃபுட் கடையில் செய்து தரப்படும் ஆம்லெட்டை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசாகத் தரப்படும் என்று போட்டியை அறிவித்துள்ளார் அந்தக் கடையின் உரிமையாளர்.

`இந்தப் போட்டிக்கு நாங்களும் வரலாமா’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் ஆம்லெட் இல்லை. 31 முட்டைகள், காய்கறிகள் எனக் கலவையாகப் பயன்படுத்தி இந்த ஆம்லெட்டை தயார் செய்கிறார்.
ஆன்லைன் உணவு ஆர்வலர்கள் இதற்கென்று ஒரு பெயரே வைத்திருக்கின்றனர், அது தான் `மாரடைப்பு ஆம்லெட்’ (‘Heart Attack Omelette’). பெயருக்கு ஏற்றாற்போலவே 30 நிமிடங்களில் இவ்வளவு பெரிய ஆம்லெட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக மாரடைப்பு உறுதி என்பதற்காகவே வைத்திருப்பார்கள் போல.
கடை உரிமையாளர் ராஜீவ் பாய், முதலில் சூடான பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, தனியாக பாத்திரத்தில் உடைத்து எடுத்து வைக்கப்பட்ட 31 முட்டைகளைச் சேர்க்கிறார்.
இரண்டு பிரெட் வைத்து, இருபுறமும் புரட்டி சீஸ் மற்றும் பனீரை சேர்த்து தட்டில் வைத்து அதன் மீது வதக்கிய காய்கறிகள் மற்றும் வெங்காயம், பட்டர், சீஸ் எனத் தூவித் தருகிறார். அவ்வளவு தான் மாரடைப்பு ஆம்லெட் தயார். இதன் விலை 1,320 ரூபாய்.

ராஜீவ் பாய் ஆம்லெட் செய்யும் காட்சிகளை வீடியோவாக X தளத்தில் வெளியிட்டுள்ள பயனர் ஒருவர், “50 கிராம் வெண்ணெய், 31 முழு முட்டை, 50 கிராம் சீஸ், 100 கிராம் கபாப் மற்றும் 200 கிராம் பனீர். மொத்தத்தில் தோராயமாக 3,575 மி.கி கொலஸ்ட்ரால்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு லட்ச ரூபாய்க்காக யார் தங்களது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வார்கள். குடும்பமாகச் சாப்பிடவேண்டியதை ஒரு ஆளாகச் சாப்பிட்டு உயிரை இழப்பதா என நையாண்டியாகக் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது போன்ற உணவுப் போட்டிகள் சில நேரங்களில் உயிருக்கே விபரீதமாக முடிந்திருக்கின்றன. எனவே மருத்துவர்கள் இவ்வகையான உணவுப் போட்டிகளை கண்டிக்கின்றனர்.
கஸ்டமரை கவர்வதற்காக உணவுக்கடைகளில் நடத்தப்படும் உணவுப் போட்டிகளை குறித்து உங்கள் கருத்தென்ன?!