கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியைச்சேர்ந்த ஒருவர், காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் நேற்று மரணம் அடைந்தார்.
மேலும், கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவர், காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு 9 வயது, மற்றொரு குழந்தைக்கு 4 வயது. இவர்களது உறவினர் ஒருவரும் சிகிச்சையில் உள்ளார். நேற்று மரணமடைந்தவரின் தொடர்பில் இருந்த சிலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மருத்துவர்கள் இந்தச் சம்பவங்களை, ’மர்ம காய்ச்சலால் ஏற்பட்ட மரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம், இது நிபா வைரஸ் பரவலாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கோழிக்கோட்டில் 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மரணம் அடைந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகவும் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி சுமார் 17-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெளவால் மூலம் நிபா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கோழிக்கோடில் இரண்டு பேர் மர்ம காய்ச்சலுக்கு மரணம் அடைந்துள்ளனர். காய்ச்சல் பாதித்து மரணம் அடைந்தவர்களின் தொடர்புகள் உள்ள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ததில், அது நிபா வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே புனே ஆய்வுக்கூடத்துக்கு சாம்பிள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நேற்று மாலை, மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஏற்கெனவே மர்ம காய்ச்சலால் இறந்தவரும், நேற்று மாலையில் இறந்தவரும் மருத்துவமனையில் ஒரு மணி நேரம் அருகருகே இருந்துள்ளனர். அதற்கு முன்பும் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இரண்டு பேர் மரணத்துக்கும் காரணம் நிபா வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். எனவே கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரணத்துக்கு காரணம் நிபா வைரஸாக இருக்கக்கூடாது என நினைக்கிறோம். புனே ஆய்வுக்கூடத்தில் இருந்து இன்று மாலைதான் முடிவுகள் வரும். அதுவரை காலம் கடத்த வேண்டாம் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.