வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஒரு நண்பர் சலிப்புடன் சொல்வார் ” உடம்பு தெம்பா நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டு சுகர் டெஸ்ட் எடுக்கப் போனா எக்கச்சக்கமா ஏறி இருக்குன்னு சொல்றாங்க” என்று ….
சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வார்கள். சிலருக்கு ஆறாத புண்கள் போன்று வேறு சில தொந்தரவுகளின் போது தெரியவரும். அப்படித் தெரிந்தவுடன் அன்று வரை விரும்பிச் சாப்பிட்டதை எல்லாம் ஒதுக்கச் செய்வதும் அதைப் பின்பற்றுவதும் முதலில் ரொம்பக் கடினமாகத் தெரியும். உழைப்பதே உணவு உடை உறையுள்ளுக்குத் தானே…. கூட இருப்பவர்களின் அனுசரணை கொஞ்சம் இருந்தால் அவர்களுக்கும் சமாளிப்பது எளிதாக இருக்கும். முதலில் மனசு பழகணும்…அவ்வளவு தான்.. அப்பவெல்லாம் நீரிழிவு ஒரு மாயை மாதிரி தெரிந்தது எனக்கு…
சரி… நம் கதைக்கு வருவோம்.
இரண்டாம் நாள் காலை எப்போதும் போல சாப்பிட அமர்ந்தோம். தட்டில் பல வகைக் காய்கறிகள் பருப்பு சேர்த்த கெட்டியான சாம்பார், முழுக்கரண்டி கீரை, ஒரு பெரிய கிண்ணம் முட்டைகோஸ் கறி, ஒரு சுட்ட அப்பளம் என்று நிரப்பி மிச்சம் இருந்த இடத்தில் கொஞ்சம் சாதம் போட்டு வைத்திருந்தேன்.
பக்கத்தில் சூப் என்கிற மாதிரி கொத்துமல்லி தழைகள் மிதக்க ஒரு கப் ரசமும் வைத்திருந்தேன். ஒரு பெரிய பாத்திரம் நிறைய கூட்டு போல இருந்த சாம்பாரைப் பார்த்து விட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சாப்பிட அமர்ந்தார்.
முக்கால் வயிறு ரொம்பி விட ஏடு நீக்கிய தயிரில் ஒரு ஸ்பூன் சாதம் போதும் என்று சொல்லிவிட்டார். அன்று மதியத்துக்கு டப்பாவில் அதே சாம்பாரில் காய்களுக்கு நடுவே சிறிது சாதம் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து பேக் செய்து விட்டேன். தயிர் சாதத்துக்கு மாற்று யோசிக்க எனக்கும் கொஞ்சம் நேரம் வேணுமே.