ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் டீ அல்லது காபியுடன்தான் ஆரம்பமாகிறது. உணவு இல்லாமல்கூட இருப்பதுண்டு, டீ இல்லாமல் வேலையே ஓடாது என்ற நிலையில் பலர் இருக்கின்றனர். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கடைப்பிடிக்கின்றனர். டீ, காபி போன்ற கஃபைன் இருக்கும் பானங்கள், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு சுவையாகவும் இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை விரும்பிப் பருகுகின்றனர்.
கஃபைன் உணவுகள் அல்லது பானங்கள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவற்றால் தீமையும் இருப்பதாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (The American academy of paediatrics) ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கஃபைன் பானங்களைக் கொடுக்கக் கூடாது; பதின்ம வயதினரும் கஃபைன் பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் குறித்து, மதுரையைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் கண்ணனிடம் கேட்டோம்…
“இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும். ஆனால், வயது வித்தியாசம் காரணமாக பெரியவர்களைவிட குழந்தைகள்தான் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக காபி, டீ, பிளாக் டீ, சோடா மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட், எனர்ஜி டிரிங்ஸ், ஐஸ்க்ரீம், கேக் போன்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்களில்தான், கஃபைன் தூண்டுதல் உள்ளது. இது போன்ற உணவுகளைத்தான் பெற்றோர்கள் எனர்ஜி டிரிங்ஸ் என குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். ஆனால் அது தவறு.