கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.
“கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை, கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் வரக்கூடியது என, இரண்டுவிதமான காமாலைகள் உண்டு” என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.
“கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும். பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் (Duodenum) பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும்.
கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாததால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை ‘ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ் (Hepatocellular jaundice)’ என்று சொல்வார்கள். இதை ‘மெடிக்கல் ஜான்டிஸ்’ என்றும் அழைக்கலாம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ‘ஹெப்படைட்டிஸ்’ வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் போன்ற காரணங்களால் வரலாம்.
சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள். அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டு கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கும் இந்த வகை காமாலை வரும். நம் நாட்டைப் பொறுத்தவரை, வைரஸ், மது, கொழுப்பு சார்ந்த ஈரல் நோய்கள், சில மாத்திரை மருந்துகளால் இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.