வடாம், க்ரம்பிள், லாலிபாப்… வீக் எண்டை வித்தியாசப்படுத்தும் `wheat' ரெசிப்பீஸ்

Share

சப்பாத்தி, அதைவிட்டால் தோசை, அதுவும் இல்லையா உப்புமா…. கோதுமையில் இவற்றைவிட்டால் வேறென்ன சமைப்பது என்கிறீர்களா? என்னென்னவோ செய்யலாம்… விருந்தே படைக்கலாம்… அந்த வகையில் இந்த வார வீக் எண்டை வீட் (wheat) ஸ்பெஷலாக்குங்களேன்…

கோதுமை வடாம்

தேவையானவை:

• முழு கோதுமை – அரை கிலோ

• பச்சை மிளகாய் – 10

• உப்பு – தேவையான அளவு

• எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்

கோதுமை வடாம்

செய்முறை:

முதல் நாள் இரவே கோதுமையை ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். பாலை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். மேலே தண்ணீராகவும் அடியில் மாவாகவும் படிந்து தெளிந்து வரும். தெளிந்த நீரைக் கொட்டிவிடவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வடிகட்டவும். அடி கனமான வாணலியில் கோதுமை விழுது, வடிகட்டிய பச்சை மிளகாய்ச்சாறு, உப்பு சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு வெந்து பளபளப்பாக வரும்போது இறக்கி வைத்து எலுமிச்சைச்சாறு பிழிந்து கிளறவும்.

ஓமப்பொடி அச்சின் உள்ளே சிறிதளவு எண்ணெய் தடவி வெந்த மாவைச் போட்டு வெள்ளைத் துணியில் பிழிந்து வெயிலில் காயவிடவும். மூன்று நாள்கள் காயவிட்டு எடுக்கவும். தேவைப்படும்போது சூடான எண்ணெயில் பொரித்துச் சாப்பிடவும்.

கோதுமை ஆப்பிள் க்ரம்பிள்

தேவையானவை:

• ஆப்பிள் – 2 (தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும்)

• கோதுமை மாவு – ஒரு கப்

• வெண்ணெய் – 125 கிராம்

• பழுப்புச் சர்க்கரை – 5 டேபிள்ஸ்பூன்

• எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு எடுக்கவும்)

• சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

• விருப்பமான நட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது)

கோதுமை ஆப்பிள் க்ரம்பிள்

செய்முறை:

ஆப்பிள், சிறிதளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் ஆப்பிள் கலவையைப் போட்டு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய் சேர்த்து உதிர் உதிராகப் பிசிறவும். இத்துடன் பழுப்புச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் அவனுக்கானப் பாத்திரத்தில் வெண்ணெயைச் சீராகத் தடவவும்.

மைக்ரோவேவ் அவனை பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் ஃப்ரீஹீட் செய்யவும். வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் வேகவைத்த ஆப்பிள் துண்டுகளை வரிசையாக அடுக்கவும். பிறகு கோதுமை மாவு கலவையை ஆப்பிளின் மேல் தூவவும். இறுதியாக நட்ஸ் வகைகள் தூவி அவனில் வைத்து 20 நிமிடங்கள் பேக் செய்யவும். வெந்ததும் விருப்பமான சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.

கோதுமை மினி பூரி வித் ஸ்பைசி சாட்

தேவையானவை –

ஸ்பைசி சுண்டல் செய்ய:

• முழு கோதுமை – ஒரு கப்

• வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

• தேங்காய்த்துருவல் – அரை கப்

• நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் – கால் கப்

• பச்சை மிளகாய் – 3 (விழுதாக அரைக்கவும்)

• தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்

• பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

• எள்ளுப்பொடி – ஒரு டீஸ்பூன்

• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்

• தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

• நெய் – சிறிதளவு

• மினி பூரி செய்ய:

• கோதுமை மாவு – ஒரு கப்

• உளுந்து மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

• ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்

• மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

• மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

• உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அலங்கரிக்க:

• நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயம் – தேவையான அளவு

கோதுமை மினி பூரி வித் ஸ்பைசி சாட்

செய்முறை:

கோதுமையுடன் வெந்தயம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் இறுத்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு விசில்விட்டு வேகவிடவும் (குழையக் கூடாது) ஆறிய பிறகு தண்ணீரை வடிகட்டவும்.

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி இஞ்சி-பூண்டு பேஸ்ட், தனியாத்தூள், எள்ளுப்பொடி சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், பச்சை மிளகாய் விழுது, மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த்துருவல், உப்பு, வேக வைத்த கோதுமை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். கோதுமை ஸ்பைஸி சாட் ரெடி.

கோதுமை மாவுடன் உளுந்து மாவு, ரவை, மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத்துணியில் சுற்றி வைக்கவும். மாவை ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி பூரிகளாக இடவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த பூரிகளின் நடுவே சிறிய துளையிட்டு கோதுமை ஸ்பைசி சாட் நிரப்பவும். மேலே கொத்தமல்லித்தழை, வெங்காயம் தூவி பரிமாறவும்.

கோதுமை லாலிபாப் வித் ஜாம் சாஸ்

தேவையானவை:

• கோதுமை மாவு – ஒன்றரை கப்

• விதை நீக்கி நறுக்கிய பேரீச்சை துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன்

• ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

• சாக்லேட் சாஸ் – தேவையான அளவு (உருண்டை பிடிக்க)

• விருப்பமான நட்ஸ் கலவை – 2 டேபிள்ஸ்பூன் (உடைத்தது)

• நெய் – 50 கிராம்

• உப்பு – ஒரு சிட்டிகை

• பிஸ்கட் ஸ்டிக் – தேவையான அளவு

• பால் – தேவையான அளவு (காய்ச்சி ஆற வைத்தது )

• ஜாம் சாஸ் செய்ய:

• ஜாம் – கால் கப்

• சோள மாவு – ஒரு டீஸ்பூன்

• தண்ணீர் – சிறிதளவு

கோதுமை லாலிபாப் வித் ஜாம் சாஸ்

செய்முறை:

ஜாமுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுக்கவும். இத்துடன் சோள மாவு சேர்த்துக் கரைத்து, குறைந்த தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை பளபளப்பாக மாறி சிறிது கெட்டியானவுடன் இறக்கி ஆற விடவும். இதுதான் ஜாம் சாஸ். கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு போட்டு, பாலை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து கெட்டியாகப் பிசையவும். பிறகு சப்பாத்தி வடிவத்துக்குத் திரட்டவும்.

தோசைக் கல்லைச் சூடாக்கி சப்பாத்தியை மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும். மிக்ஸியில் சப்பாத்தியை உடைத்துப் போட்டு கொரகொரப்பாகப் பொடிக்கவும். இத்துடன் பேரீச்சைத் துண்டுகள், விருப்பமான நட்ஸ் கலவை, ஏலக்காய்த்தூள், சாக்லேட் சாஸ், நெய் சேர்த்துப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி பிஸ்கட் ஸ்டிக்கில் பிடித்து வைக்கவும். ஜாம் சாஸில் ஸ்டிக்கை முக்கி எடுத்துப் பரிமாறவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com