இங்கிலாந்தில் அடிக்கடி தலைப்பு செய்தியாகும் பார்பரா தாக்கரே பாட்டி, இந்த மாதத்தில் தனது 85 வயதை எட்டியுள்ளார். அத்துடன் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
தன்னுடைய செயல்களால் இங்கிலாந்தில் அனைவரையும் கவர்ந்த இந்தப் பாட்டி வழக்கமாக ஜாகிங் செய்து பணம் திரட்டுவார். இந்த முறை அவர் அடிடாஸின் புதிய விளம்பரத்தில் இடம்பெற்று பணம் திரட்டியுள்ளார்.

ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான பார்பரா தாக்கரே பாட்டி, தன்னுடைய உடல் தகுதியை பராமரிக்க ஓடுகிறார்.
பார்பரா… லிவர்பூல் கால்பந்து வீரர் மோ சலா, கத்தார் தடை வீரர் மரியம் ஃபரிட் மற்றும் எகிப்திய ஓட்டப்பந்தய வீராங்கனை கதீஜா ஹெகாசி ஆகியோருடன் இணைந்து அடிடாஸின் புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார். புதிய சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பார்பரா தாக்கரே தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடி, ரன் நார்த் வெஸ்ட் டிராஃபோர்ட் ஓட்டத்தை சிறப்பாக முடித்தார். இதில் 80+ வயது பிரிவில் கலந்துகொண்ட ஒரே பங்கேற்பாளர் இவர்தான்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேட்டர் மான்செஸ்டரின் ஸ்டாக்போர்ட்டில் உள்ள செயின்ட் ஆன்ஸ் ஹாஸ்பிஸ் ( St Ann’s Hospice) அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக ஓடினார் பாட்டி. அந்த அமைப்பின் சாம்பியனாக இருந்து குறுகிய ஆண்டுகளில் £20,000 -க்கு மேல் திரட்டியுள்ளார். 1990 -களில் அவரின் சகோதரி அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் மறைந்த பிறகு, அங்கு சிகிச்சை பெறுபவர்களின் நல்வாழ்வுக்காக பணம் சேகரித்து வருகிறார் பார்பரா.
‘செயின்ட் ஆன்ஸ் ஹாஸ்பிஸ்ஸுக்கு குறிப்பிடத்தக்க தொகை தருவதாக அடிடாஸ் சொன்னதால்தான், விளம்பரத்தில் நடிக்கலாம் என்று சம்மதித்தேன்’ என்ற பார்பரா, நார்த் வெஸ்ட் டிராஃபோர்ட் ஓட்டத்தில் தன் சிறப்பான ஓட்டமான 85 நிமிட ஓட்டத்தை அவர் குடும்பத்தைச் சேர்ந்த 20 உறவுகள் முன்னிலையில் எட்டிக்காட்டினார்.