கடந்த மூன்று அத்தியாயங்களாக தாய்ப்பால் சுரத்தல் குறித்தும், தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்தும் விரிவாகக் கண்டோம். குறிப்பாக 7-வது அத்தியாயத்தில், கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்றவை, ஆக்ஸிடோசின் மறிவினையில் இடையூறு ஏற்படுத்துவதால், பால் சுரத்தல் மிகவும் குறையக்கூடும் என்பதையும், மன அமைதி மற்றும் நம்பிக்கையுடன் தாய்ப்பால் அளிக்கும்போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை (Four Steps of Positioning and Attachment) உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு, தாய்ப்பால் கொடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளுக்குப் பிறகும், தாய்ப்பால சுரப்பு போதுமாக இல்லாத காரணத்தினால் தான், தங்களின் மருத்துவர் பவுடர் பாலும் தாய்ப்பால் சுரத்தலை அதிகரித்திட டோம்பெரிடோன் (Domperidone) மருந்தினையும் தொடங்கியிருக்கக் கூடும்.
தாய்ப்பால் சுரத்தல் போதுமான அளவு இல்லையென்றால், தாய்ப்பால் சுரத்தலை அதிகரித்திட டோம்பெரிடோன் (Domperidone) மற்றும் மெட்டோக்ளோப்ரமைடு (Metoclopramide) ஆகிய மருந்துகள், மருத்துவர்களால் மிக பொதுவாக கொடுக்கப்படுகின்றன. டோம்பெரிடோன் மற்றும் மெட்டோக்ளோப்ரமைடு ஆகிய மருந்துகள் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோனின் அளவினை உயர்த்துவதன் மூலம், தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கின்றன. எனினும், தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க டோம்பெரிடோன், மெட்டோக்ளோப்ரமைடு அல்லது ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் அறிவுறுத்தலில் மட்டுமே, அவர் குறிப்பிட்ட டோஸ் மற்றும் நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களில், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தினந்தோறும் கூடுதலாக 600 கிலோ கலோரிகளும், 13.6 கிராம் புரதமும் தேவைப்படுகின்றன. எனவே, உணவு முறையை கூடுதல் கலோரி மற்றும் புரதம் கிடைக்கும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும். உணவில் 30% புரதம் கிடைக்கும் வகையில் முட்டை, பால், பருப்பு வகைகள், மீன் மற்றும் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தினந்தோறும் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.