ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக கூடுதலாக 1100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பிரதான அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பணியாற்றும் அலுவலர்களுக்கு முதற் கட்ட பயிற்சி முடிவடைந்து, 2ம் கட்ட பயிற்சிக்காக சுழற்சி முறையில் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தவிர தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும், ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலக கிடங்கில் கொண்டு வந்து வைக்கும் வரையிலான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 3 கம்பெனி துணை ராணுவத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 520 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்த மொத்தம் 1,408 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 1,100 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தவிர 238 வாக்குச் சாவடி மையங்களிலும் பயன்படுத்த ஏற்கனவே 286 வாக்குப் பதிவு கருவிகளும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 310 விவி பேட் கருவிகளும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 30 சதவீதம் அளவில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.பொறியியல் கல்லூரியிலும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.