நிறைய நோய்களை நாம் வயதோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். புற்றுநோய் பெரியவர்களுக்குதான் ஏற்படும் என்கிற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகூட புற்றுநோய்க்கு ஆட்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவர் ஜனனி அருளிடம் கேட்டோம்…
“பிப்ரவரி 15-ம் தேதி சர்வதேச குழந்தைகளுக்கான புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த 2023-ம் ஆண்டின் இத்தினத்த்துக்கான இலக்கு என்னவென்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உயிர் பிழைப்பு விகிதத்தை அதிகரிப்பதுதான். புற்றுநோய்க்கு ஆளானவர்களின் உயிர் பிழைப்பு விகிதம் வளர்ந்த நாடுகளில் 80 சதவிகிதமாகவும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 20 – 40 சதவிகிதமாகவும் இருக்கிறது.

வளரும் நாடுகளில் உயிர் பிழைப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம், இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதுதான். புற்றுநோய்க்கான சிறிய அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்போதே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிர்பிழைக்கலாம். காலம் தள்ளிப்போகும்போது புற்றுநோய் பெருமளவு பரவி விடும் என்பதால் சிகிச்சை அளிப்பதே கடினமாகி விடும்.
குழந்தைகளுக்கான புற்றுநோய்க்கு சில முக்கிய அறிகுறிகள் இருக்கின்றன. உடலில் ஆங்காங்கே சிராய்த்தது போன்ற புண்கள் ஏற்படுவது, ஈறுகளில் ரத்தம் கசிவது ஆகியவை ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். உடலில் ஆங்காங்கே வலியில்லாத கட்டிகள் இருப்பது, அதிக காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், உடல் எடைக்குறைவு, கண்ணில் தென்படும் மாற்றங்கள், தெளிவில்லாத பார்வை, வயிறு வீக்கம், பசியின்மை ஆகிய அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது.
தலைவலி, விடியற்காலையில் வரும் வாந்தி ஆகியவை மூளைக்கட்டிக்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும். எலும்பு வலி, சோர்வு, மயக்கம் வருவது, நடக்கும்போது உடல் தள்ளாடுவது ஆகியவையும் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்பதால் இவற்றை உதாசீனப்படுத்தக்கூடாது.

மருத்துவத்துறையைப் பொறுத்தவரை 14 வயதுக்குக் கீழ் உள்ள அனைவருமே குழந்தைகள்தான். பச்சிளம் குழந்தைக்குக் கூட புற்றுநோய் ஏற்படலாம். எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. புற்றுநோயில் இது மிகவும் முக்கியம்.
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தாலே புற்றுநோயாக இருக்குமோ என்று பயப்பட வேண்டியதில்லை. சிராய்த்தது போன்ற புண் ஏற்படுகிறதென்றால் அதற்கு மருந்து தடவியும் அது குணமாகாத போதுதான் சந்தேகிக்க வேண்டும்.
இந்த அறிகுறிகள் தென்படுகையில் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கெனவே பிரத்யேக மருத்துவர்கள் புற்றுநோய்த் துறையிலும் இருக்கிறார்கள். பலருக்கும் அது தெரிவதில்லை. விழிப்புணர்வு இல்லாததால் ஆரம்பகால அறிகுறிகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் புற்றுநோய் நன்கு வளர்ந்த பிறகு மருத்துவ சிகிச்சைக்குக் கூட்டி வருவார்கள். அப்போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

லுக்கிமியா என்கிற ரத்தப்புற்றுநோய், லிம்போமா, சிறுநீரகப் புற்றுநோய், மூளைக்கட்டி, எலும்பு புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்குப் பொதுவாக வரக்கூடிய புற்றுநோய்கள் ஆகும். புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரபி என தேவைப்படுகிற சிகிச்சைகள் அளிக்கப்படும். குழந்தைகளுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து கொள்வதும், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் இந்நோயை குணப்படுத்த முடியும் என்கிற விழிப்புணர்வும் அனைவருக்கும் ஏற்படுவது அவசியம்” என்கிறார் ஜனனி அருள்.