பொங்கல் விழா தகராறு; தலைக்கேறிய போதை… இளைஞரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிக்கொன்ற நபர்!

Share

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27). இவர், லாரி ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிரவீன். இவர், கஞ்சா போதைக்கு அடிமையானதோடு, மனம்போன போக்கில் தன்னைப் பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வலம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி அந்தப் பகுதியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றிருக்கிறது. இந்தப் போட்டியை விக்னேஷ், அவரின் நண்பர்கள் ஏற்பாடுசெய்து நடத்தினர். அப்போது கஞ்சா போதையில் வந்த பிரவீன், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதை விக்னேஷ், அவரின் நண்பர்கள் கண்டித்திருக்கின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த பிரவீன், ‘நான் எவ்வளவு பெரிய ரௌடி தெரியுமா? உங்களைச் சும்மா விட மாட்டேன்’ என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், விக்னேஷ் லாலாப்பேட்டை ஆண்டியப்பன் நகர் மைதானத்தில் தனது புல்லட் வாகனத்தில் நின்றபடி, போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த பிரவீன், விக்னேஷின் கழுத்தில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டுவந்த நண்பர்கள், அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

விக்னேஷ் (கொலைசெய்யப்பட்டவர்)

ஆனால், அங்கு சிசிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்திருந்த விக்னேஷின் உடலை, கரூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டுசென்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும், லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்து, தப்பி ஓடிய கஞ்சா போதை ஆசாமி பிரவீனை தேடிவருகின்றனர். இந்த நிலையில், குளித்தலை கோட்டத்துக்குட்பட்ட குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதால், இங்கு கொலை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, ‘கஞ்சா புழக்கத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்’ என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்திருக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com