மதுரை: மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து, அமைச்சரானதற்கு வாழ்த்து பெற்றார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு 7.45 மணியளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி, அங்கிருந்து அழகர்கோவில் ரோட்டில் உள்ள கோர்ட் யார்ட் ஓட்டலுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரியின் இல்லத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு 9.15 மணியளவில் வந்தார்.
மு.க.அழகிரி, உதயநிதியை சால்வை போர்த்தி வரவேற்று, ‘‘எனது தம்பி மகன் அமைச்சரான பிறகு, வாழ்த்து பெறுவதற்காக என்னை சந்திக்க வந்துள்ளார்’’ என கூறினார். அப்போது வீட்டு வாசலுக்கு வந்த காந்தி அழகிரி, உதயநிதியை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு உதயநிதி, மு.க.அழகிரியை சந்தித்து, அமைச்சரானதற்கு வாழ்த்து பெற்றார். பின்னர் உதயநிதி அங்கு இரவு டிபன் சாப்பிட்டார். சிறிதுநேரம் இருவரும் தனியாக பேசினர். அப்போது மு.க.அழகிரியின் குடும்பத்தினர் மட்டும் உடனிருந்தனர். பின்னர் வெளியே வந்த உதயநிதியிடம், ‘அரசியல் ரீதியாக வந்தீர்களா, உறவுரீதியாக வந்தீர்களா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு உதயநிதி, ‘‘பெரியப்பாவை பார்த்து ஆசி வாங்க வந்தேன்’’ என்றார். 25 நிமிடங்கள் அங்கிருந்த உதயநிதி, பின்னர் கோர்ட் யார்ட் ஓட்டலுக்கு வந்து தங்கினார்.