டி20 உலகக் கோப்பையில் அசோசியேட் நாடுகள் தந்த ஆச்சரியங்கள் :
தங்கள் திறமையைக் காட்சிப்படுத்துவதற்கான வருடக்கணக்கிலான ஏக்கத்தை அசோசியேட் அணிகள் தீர்த்துக் கொள்வது இது போன்ற பெரிய மேடைகளில்தான். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை பல சர்ப்ரைஸ்களை உள்ளடக்கி இருந்தது. இலங்கையை வீழ்த்திய நமீபியா, இங்கிலாந்தை அயரவைத்த அயர்லாந்து, தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்த நெதர்லாந்து, பாகிஸ்தானைப் பந்தாடிய ஜிம்பாப்வே என அசோசியேட் நாடுகள் ஆச்சரியங்களைத் தந்தன.
கடலில் அலையும் குமிழி போல நிரந்தர இடமில்லா, வருமானத்திற்கே உத்திரவாதமில்லா விட்டாலும் கிரிக்கெட்டின் மீதான நேசத்தால் உந்தப்படும் இந்நாடுகளின் வீரர்களுக்கு சிக்கந்தர் ரசா, பால் ஸ்டிர்லிங், மேக்ஸ் ஓ’டவுட் உள்ளிட்ட வீரர்களின் சாதனைகள் விடிவெள்ளியாகி நம்பிக்கையூட்டுகின்றன.
`Tough Cookie’ என்ற சொற்பதம், இருக்கும் கடினமான சூழலைக்கூட சுலபமாகக் கடக்கும் அசைக்க முடியாத மனோதிடம் உள்ளவர்களைக் குறிக்கும். அசோஸியேட் அணிகளின் ஒவ்வொரு வீரர்களிடமும் காணப்படும் இந்த உறுதி இருந்தாலே எதனையும் எதிர் கொள்ளலாம் என்ற எண்ணத்தை, நம்பிக்கையை இந்த உலகக்கோப்பையில் அவர்கள் திரும்பத்திரும்ப ஏற்படுத்தினர்.
இவைதவிர காமன்வெல்த்தில் கிரிக்கெட் அறிமுகம், மாற்றியமைக்கப்பட்ட ஒருசில ஐசிசி விதிகள், கிரிக்கெட் ஒளிபரப்பில் ஓடிடி தளங்களின் படையெடுப்பு என பல விஷயங்களை இந்தாண்டு பார்த்திருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் எந்தாண்டுமில்லாத அளவு இந்தாண்டு அதிகரித்திருந்ததும் நேர்மறையான விஷயம்தான்.
இந்தாண்டு முழுவதும் பல ஏற்ற இறக்கங்கள், திருப்புமுனைகள், டெத் எண்ட்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் என அத்தனையையும் கிரிக்கெட் உலகம் பார்த்து விட்டது. எனினும், காலத்திற்கேற்றவாறு வெவ்வேறு வடிவெடுத்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ள கிரிக்கெட் தயங்கியதே இல்லை.
இதனாலேயே, ஆண்டின் முடிவில், கிரிக்கெட் மீதான ரசிகர்களின் நேசமும் மோகமும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இன்னுமொரு மடங்கு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டிலும் அது பன்மடங்கு கூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.