மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், தேசிய அளவில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தரப்பில் போராட்டத்துக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே, மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

`பெண்கள் பணிபுரியும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைகளை இணைக்கும் வகையில் மொபைல் செயலி உருவாக்கப்படும்” என்ற அந்த அறிவிப்பில், `அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மகளிர் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் இரவு நேர போலீஸ் ரோந்து மேற்கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில், ஒட்டுமொத்த பாதுகாப்பு மேற்பார்வைக்காகக் காவலர்களால் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவர். மருத்துவர்கள் உள்பட பெண்களின் வேலை நேரம் 12 மணிநேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இரவு பணிகளில் பெண் மருத்துவர்கள் ஜோடியாக பணியாற்றும் வகையில் ஷிப்டுகள் ஏற்பாடு செய்யப்படும். அதேசமயம், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களுக்கான இரவுப் பணியையும், பாதுகாப்புக் காவலர்களையும் முடிந்தவரைத் தவிர்க்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.