தீபாவளி பண்டிகை வந்தால் அம்மாக்களுக்கு மட்டுமல்ல, கல்லூரி போகும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் ‘ஏதாவது ஸ்வீட்ஸ் செய்யலாமா’ என்ற ஆசை வரும். உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, இங்கே பாரம்பர்யமான, எளிமையான மற்றும் லேட்டஸ்ட்டான சில இனிப்புகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். செய்து ருசியுங்கள்! சுவையான தீபாவளி நல்வாழ்த்துகள்!
டிரை ஃப்ரூட்ஸ் சோமாஸ்

தேவையானவை:
மைதா – கால் கிலோ
பொட்டுக்கடலை, சர்க்கரை – தலா 100 கிராம்
பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 6
கொப்பரைத் தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதாவுடன் 2 டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். பொட்டுக்கடலையைக் கொரகொரப்பாக அரைக்கவும். டிரை ஃப்ரூட்களையும் கொரகொரப்பாக அரைக்கவும். சர்க்கரையைப் பொடிக்கவும். தேங்காய்த் துருவலை ஒரு டீஸ்பூன் நெய்விட்டு நன்கு வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எள் சேர்த்து வெடித்ததும் கசகசா, அரைத்த டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சர்க்கரைத்தூள், பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். பூரணம் ரெடி. பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி மாவு தொட்டுத் தேய்த்து சப்பாத்திகளாக்கவும். சப்பாத்தியில் நடுவில் பூரணம் நிரப்பி ஓர் ஓரத்தில் மைதா பேஸ்ட் வைத்து சப்பாத்தியை ஒட்டி, சோமாஸ் ரோலரில் கட் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வெள்ளைப் பூசணி அல்வா
தேவையானவை:
* வெள்ளைப் பூசணி – 1 கப்
* சர்க்கரை – முக்கால் கப்
* நெய் – கால் கப்
* ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
* ஸ்வீட்லெஸ் கோவா – தேவையான அளவு
* பாதாம் மிக்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை:
பூசணியின் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் துருவி இட்லிப் பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேகவிட்டு ஆறவைக்கவும். ஆறிய பிறகு சதைப்பகுதியில் உள்ள நீரை நன்கு பிழிந்து வடித்துவிடவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் பூசணித் துருவலைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்து தீயைக் குறைத்துவைத்து நன்கு கிளறவும். இடையிடையே சிறிதளவு நெய் சேர்க்கவும். கலவை நன்கு திரண்டு வரும்போது பாதாம் மிக்ஸ், மீதமுள்ள நெய் மற்றும் கோவாவைச் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். 250 கிராம் அல்வா செய்ய 25 கிராம் ஸ்வீட்லெஸ் கோவா போதுமானது. இந்த அல்வாவுக்கு நெய் அதிகம் தேவைப்படாது. அதேபோல், பாதாம் மிக்ஸில் உள்ள கலரும் ஏலக்காய்த்தூளும் போதுமானது, ஃபுட்கலர் சேர்க்கத் தேவையில்லை.
மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு – ஒரு கப் (துருவவும்)
ஜவ்வரிசி – கால் கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பாதாம், முந்திரி – தலா 10
பால் – ஒரு லிட்டர்
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை டம்ளர்
பனை வெல்லம் – அரை கப் (பொடித்தது)
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ஜவ்வரிசியை ஒரு கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். காய்ச்சி ஆறவைத்த பாலுடன் பாதாம், முந்திரியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பாலுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் காய்ச்சவும். நன்கு கொதிவந்த பிறகு துருவிய கிழங்கைச் சேர்த்து வேகவிடவும். பின்பு ஜவ்வரிசியைச் சேர்த்து வேகவிடவும். ஜவ்வரிசி வெந்ததும். அரைத்த பாதாம் – முந்திரி விழுது, பனை வெல்லம் சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும். வாணலியில் நெய்விட்டு திராட்சையைச் சேர்த்து வறுத்து, அதை நெய்யுடன் பாயசத்தில் கலந்து, ஆறியதும் பரிமாறவும்.
ஈஸி ரசமலாய் ட்ரேஸ் லீஷே கேக்
தேவையானவை:
வெனிலா கப் கேக் – 8
ரசமலாய் – 4
ரசமலாய் பால் – முக்கால் கப்
கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்
பால் பவுடர் – 4 டீஸ்பூன்
விப்பிங் க்ரீம் – அரை கப்

செய்முறை :
ரசமலாய் பாலுடன் கண்டென்ஸ்டு மில்க், பால் பவுடர் கலந்துகொள்ளவும். விப்பிங் க்ரீமை நன்கு கெட்டியாகும் வரை அடித்துக் கொள்ளவும். ஒரு தட்டில் கேக்குகளை அடுக்கி வைத்து டூத்பிக் கொண்டு ஆங்காங்கே ஓட்டை போட்டு பால் கலவையை ஊற்றி ஊறவிடவும். விப்பிங் க்ரீமை மேலே பூசி, ரசமலாயை இரண்டாக நறுக்கி, கேக்கின் மேல் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
காஜு கத்லி
தேவையானவை:
முந்திரிப்பருப்பு – 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
பட்டர் பேட்டர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை:
முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜாரில் நைசாகப் பொடித்துக்கொள்ளவும். சர்க்கரையை ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பிப் பதம் வந்ததும் பொடித்த முந்திரியைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறவும். பின்னர் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறி கெட்டியாகும்போது கலவையை உருட்டிப் பார்க்கவும். விரல்களில் ஒட்டாமல் வருவதுதான் சரியான பதம். பிறகு இறக்கி நெய் தடவிய பட்டர் பேப்பரில் கலவையைக் கொட்டி லேசான சூட்டில் சப்பாத்தி மாவு போல் பிசைந்து மெல்லியதாகத் தேய்த்து, விருப்பமான வடிவில் வெட்டவும்.