ஒவ்வொரு வருடமும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதவிடாய் சுகாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பது உள்ளிட்டவையே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கம்.
என்னதான் கல்வி, அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், பெண்கள் சார்ந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் நாம் பின்தங்கியிருக்கிறோம். அதுவும் கிராமப்புறங்களில் நிலவும் சில நம்பிக்கைகளால் சிறுமிகள், பெண்கள் மத்தியில் இது குறித்த புரிந்துணர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும்.
சிறுமியர், மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரம் கிடைக்கச் செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு `புதுயுகம்’ என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகள் ஆசிரியையிடமும், பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியர் அல்லது அங்கன்வாடி பணியாளரிடமும் நேப்கின்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த திட்டத்தின் தற்போதைய செயல்பாடு எந்தளவில் உள்ளது, சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதன் நோக்கம் மாணவிகளுக்கு நிறைவேறி உள்ளதா? இதுகுறித்து, விகடன் நிருபர் குழு, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவிகள் சிலரை சந்தித்துப் பேசியது.