அஞ்சறைப்பெட்டியில் இடம் பெற்றுள்ள தனியா, சோம்பு மற்றும் சீரகத்தைப் பயன்படுத்தினால் பல நோய்களைத் தடுக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் உண்மையா என்பது குறித்து திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம்.
`சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம்’ போன்ற பழமொழிகள், வீட்டில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. அஞ்சறைப்பெட்டியின் அருமையை அறிந்தால் மருத்துவமனையையும், மருந்துகளையும் தேடி ஓடும்நிலை குறையலாம்.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்!
வாழ்க்கைமுறையும், நாம் வாழும் சூழலும் மாறிக்கொண்டே இருப்பதுபோல், உணவுமுறைகளிலும் மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உடல் ஆரோக்கியம் தொடர்பான பல தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அது சரியா, தவறா என்றெல்லாம் கூட யோசிக்காமல் சிலர் அப்படியே பின்பற்றுவதைப் பார்க்கிறோம்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரவிய தகவல் ஒன்றில், அஞ்சறைப்பெட்டி மருந்துகளான தனியா, சோம்பு மற்றும் சீரகத்தைப் பயன்படுத்தினால் பல நோய்களைத் தடுக்கலாம் என்று பகிரப்பட்டு வருகிறது. அதில் மேலும், `சீரகம், சோம்பு, தனியா இவை அனைத்தையும் இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை காலை நேரத்தில் 5 நாள்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டால், கை,கால் வலி, உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பு, கல்லீரல் பாதிப்புகள், தைராய்டு, சர்க்கரைநோய், புற்றுநோய், பாதவலி, பாத எரிச்சல், மூட்டுவலி இவை அனைத்து குணமாகும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.