சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மதியம் சுமார் 2 மணி அளவில், ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் ஆலை வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் குழப்பமும் நிலவியது. வெடிப்புச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தங்களைக் காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி சிதறி ஓடினர். இதனால் அங்கு நெரிசல் சூழல் உருவானது.
இந்த விபத்தில் 30 முதல் 40 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரகால மீட்புக் குழுவினரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். விபத்து நடந்தவுடனேயே நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டாலும், பாய்லர் வெடித்ததற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோர விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.