சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக வருண் சக்ரவர்த்தி ஆடியிருந்தார்.

ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கம் செய்யபட்டார். இப்போது அதே துபாயில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வருண் சக்ரவர்த்தி, ” இந்தப் போட்டியில் விளையாடப் போகிறேன் என்பது எனக்கு திடீரென்று தான் தெரியும். மிகவும் பதற்றமாக இருந்தேன். ஏனெனில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் நான் அதிகமாக விளையாடியது இல்லை.
ஆனால் நேரம் செல்ல செல்ல சௌகர்யமாக உணரத் தொடங்கினேன். விராட், ரோஹித், ஸ்ரேயாஸ், ஹர்திக் ஆகியோர் என்னிடம் பேசினார்கள். அது எனக்கு உதவியாக இருந்தது. நாட்டுக்காக விளையாடுவேன் என்று எனக்கு தெரியும். ஆனாலும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. 2021-ல் நான் இங்கு விளையாடியப்போது சிறப்பாக விளையாடவில்லை. முற்றிலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை.

ஆனால், சரியான இடங்களில் நாம் பந்தை வீசினால் அது நமக்கு உதவும். 26 வயதில்தான் நான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். அதற்கு முன்பு எனக்கு ஆர்க்கிடெக்ட் ஆவதும், சினிமாவில் நடிப்பதும்தான் எனது கனவாக இருந்தது. பந்து வீசிய விதமும், வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசியதும் சிறப்பாக இருந்தது. இது ஒட்டுமொத்த அணியின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி தான்” என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
