தண்ணீர் மூலம் பரவக்கூடிய ஜி.பி.எஸ் (GBS) எனப்படும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் மட்டும் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர 10 பேர் உயிரிழந்துள்ளனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக இந்த நோய் பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த நோய் வந்தால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். தண்ணீர் மூலம் இந்த நோய் தொற்று பரவுவதால் புனேயில் மக்கள் பானிப்பூரி சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். பானிப்பூரி வியாபாரிகள் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதாக வந்த செய்தியை தொடர்ந்து வியாபாரம் அதிரடியாக சரிய ஆரம்பித்துவிட்டது. தெருவோர உணவுகளில் பானிப்பூரி மிகவும் முக்கிய இடத்தில் இருக்கிறது. வட இந்தியர்கள்தான் இந்த வியாபாரத்தை அதிகமாக செய்து வருகின்றனர்.
புனேயின் சாலுகே விகார் சாலையில் பானிப்பூரி வியாபாரம் செய்யும் பிரமோத் இது குறித்து கூறுகையில், “‘என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் தண்ணீர் எங்கிருந்து எடுத்து வருகிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கூட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. எனது வீட்டில் இருந்து சுத்தமான தண்ணீர் கொண்டு வந்து வியாபாரம் செய்கிறேன். இதற்காக எனது வீட்டில் ஆர்.ஓ ஃபில்டர் வைத்திருக்கிறேன்” என்றார். புனே ஃஎப்.சி சாலையில் பானிப்பூரி வியாபாரம் செய்யும் அர்ஜூன் என்பவர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பெறுவதற்காக மினரல் வாட்டரை பயன்படுத்துகிறார். இது தொடர்பாக தான் வைத்திருக்கும் தெருவோர பானிப்பூரி கடையில் ஒரு விளம்பர போர்டும் தொங்க விட்டிருக்கிறார்.
“முன்பு எனது கடைக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 45 ஆக சரிந்து விட்டது. மிகவும் பிஸியான சாலையில் வியாபாரம் இல்லாமல் இருக்கிறது” என்கிறார். கோரேகாவ் பார்க் பகுதியில் பானிப்பூரி வியாபாரம் செய்யும் ஒருவர் இது குறித்து கூறுகையில், “நாங்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே பயன்படுத்துகிறோம். ஆனாலும் வாடிக்கையாளர்கள் எந்தமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்” என்றார்.
ஐ.டி துறையில் பணியாற்றும் சுஹாஸ் செளதரி என்பவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் சென்று பானிப்பூரி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இப்போது நோய் தொற்று செய்தி வெளியான பிறகு பானிப்பூரி சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். மும்பையிலும் இதே போன்று பானிப்பூரி வியாபாரம் சரிய ஆரம்பித்து இருக்கிறது. ஜி.பி.எஸ் நோய் தொற்று கோழிக்கறி வியாபாரத்தையும் பாதித்து இருக்கிறது.