சென்னை: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பார் என்று பல்வேறு கட்சி, இயக்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் பலர் உதயநிதியை பாராட்டி பேசினர். சபாநாயகர் அப்பாவு: ஒரு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்கும் போது நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: பொதுவாக ஆய்வுக்கு சென்றால் பிறரின் கோரிக்கைகளை கேட்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பக்குவம் அதிகம். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த நாடாளுமன்ற, அவர் ஏற்றிருக்கும் பொறுப்பை மிக சிறப்பான முறையில் பங்காற்றுவார் என நம்புகிறேன். இளைஞர்களை அணி திரட்டுவதில் சாதனை படைத்தவர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: திமுக இளைஞர் அணி செயலாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன். ஏற்கனவே, திமுகவிற்கு இளைஞர்களை அணி திரட்டுவதில் சாதனை படைத்த அவர், இளைஞர் நலன் சார்ந்த துறையிலும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையிலும் பல அரிய சாதனைகளை நிச்சயம் படைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழக அரசின் திட்டங்கள் சரியாக செயலாக்கம் பெறுகிறதா என்பதை கண்காணிக்கிற பொறுப்பின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிற பணியை இவர் சிறப்பாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தகைய பொறுப்பை ஏற்பதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உரிய பங்கை ஆற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோபண்ணா: அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: துடிப்பும், செயல் திறனும் மிக்க திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று ‘திராவிட மாடல்’ அமைச்சரவையில் ஓர் அங்கமாக ஆகி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்து அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் பக்குவப்பட்டே இந்தப் பொறுப்பை ஏற்கிறார். எதைப்பற்றியும் பகுத்தறிவு மனப்பான்மையோடு பார்த்து, தடைக்கற்களைத் தாண்டும் நெஞ்சுரத்தோடு அவர்தம் அரசியல் பயணம் அடுத்த மைல்கல்லாகத் தொடரட்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்கும் திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எமது வாழ்த்துகள். மேயர் பிரியா: அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
கவிஞர் வைரமுத்து: உள்ளங்கவர் உதயநிதி, கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும் தான். இன்னொரு முகம் இருக்கிறது, அறிவு முகம். செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்: இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுக வெற்றிக்கு அவரது பிரசாரம் பெரும் வெற்றியையும், வரவேற்பையும் அளித்தது. அவர் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள்.