குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு; இபிஎஸ் புறக்கணிப்பு: மோடி, அமித்ஷா சந்திக்காததால் பதிலடி

Share

சென்னை: குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டார். அழைப்பு விடுக்கப்பட்டும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து விட்டார். டெல்லி சென்றபோது மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதாலேயே எடப்பாடி குஜராத் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. இதையடுத்து பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

குஜராத், காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பாஜ மேலிடம் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது.

பாஜ மேலிடத்தின் அழைப்பை ஏற்று, குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மாலையே சென்னையில் இருந்து விமானத்தில் அகமதாபாத் சென்றார். பின்னர், நேற்று குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் அதிமுக எம்பியும், மகனுமான ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அதேபோன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேநேரம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பூபேந்திர படேலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளபோதிலும், 12ம் தேதி (நேற்று) ஏற்கனவே திட்டமிட்ட முக்கிய நிகழ்வுகள் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் குஜராத் தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை இந்தியாவில் சிறப்பாக நடத்துவது குறித்தான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டெல்லி சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனியாக சந்தித்து அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த எடப்பாடி திட்டமிட்டிருந்தார். ஆனால், எடப்பாடியை தனியாக சந்திக்க இருவரும் நேரம் ஒதுக்கவில்லை. விழாவில் சந்தித்தபோது, வணக்கம் மட்டும் தெரிவித்துக் கொண்டனர்.

அதேபோன்று, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் சென்னை வந்தபோதும் தனியாக சந்திக்க எடப்பாடிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து பாஜ தலைமை எடப்பாடியை சந்திப்பதை புறக்கணித்து வந்தது. இதற்கு பதிலடியாகத்தான், குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜ மேலிடம் அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லாமல் நேற்று புறக்கணித்து விட்டார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் கூறப்படுவது போன்று, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று சென்னையிலோ அல்லது வெளியூரிலோ பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியும் இல்லை.

அதேநேரம் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தில் ஓபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி தனியாக பாஜ தலைவர்கள் யாரையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை. தொடர்ந்து பாஜ தலைமை எடப்பாடியை சந்திப்பதை புறக்கணித்து வந்தது. இதற்கு பதிலடியாகத்தான், குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜ மேலிடம் அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லாமல் நேற்று புறக்கணித்து விட்டார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com