Doctor Vikatan: என் மனைவிக்கு சினைப்பையில் புற்றுநோய் வந்து, ஒரு சினைப்பையை மட்டும் நீக்கிவிட்டார்கள். கீமோதெரபி எடுத்து குணமாகி ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொண்டார். 2 வருடங்கள் கழித்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொண்டார். இரண்டாவது குழந்தை பெற்று ஒரு வருடம் கழித்து மீண்டும் புற்றுநோய் தாக்கி இறந்துவிட்டார். தாயின் நோய்த்தாக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையா? எப்போதும் மனதில் இந்தச் சிந்தனை பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
Saravanan, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா.
அம்மாவுக்கு சினைப்பை புற்றுநோய் இருந்தால் மகள்களுக்கும் அந்த பாதிப்பு தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. அம்மாவிடம் இருந்தோ, பாட்டியிடம் இருந்தோ, பிள்ளைகளுக்கு பரம்பரையாகத் தொடரும் ஃபெமிலியல் வகை புற்றுநோய்களின் தாக்கம் வெறும், 5 சதவிகிதம் மட்டுமே. மீதமுள்ள 95 சதவிகிதப் புற்றுநோய்கள் தாமாக வரக்கூடியவைதான்.
அப்படியானால் இந்த 5 சதவிகித பாதிப்பு ஒருவரைத் தாக்குமா எனக் கண்டறிய ஒரே வழி ஜெனடிக் சோதனை மட்டுமே. உங்கள் விஷயத்தில் உங்கள் மனைவிக்கு சினைப்பை புற்றுநோய் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்… அவருக்கு ஜெனடிக் டெஸ்ட்டிங் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி ஜெனடிக் டெஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் குரோமோசோம்களில் ஏதேனும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டிருந்தால் மகள்களுக்கும் டெஸ்ட் செய்து பார்க்க முடியும்.
அம்மாவுக்கு அப்படி டெஸ்ட் செய்யப்படாத பட்சத்தில், மகள்களுக்கு பாதிப்புக்கு வாய்ப்பிருக்கிறதா எனக் கண்டறிய பிரத்யேக சோதனை எதையும் செய்ய முடியாது.