சென்னை: சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல், மண்டை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் தலைவர்கள் டெல்லியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு அவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டும் என்று மேலிடம் அறிவித்திருந்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இருந்து ஏராளமானோர் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நியாயம் கேட்க வந்தனர்.
அப்போது, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதில் அளிக்காமல் கூட்டம் முடிந்ததும் புறப்பட தயாரான அவரின் காரை வழிமறித்ததால் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்கியதில் நெல்லை மாவட்ட காங்கிரசார் 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. கே.எஸ்.அழகிரியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
குறிப்பாக, தனியார் ஓட்டலில் மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். அதில், டெல்லி சென்று கட்சி தலைமையிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தவறான நடவடிக்கைகள் குறித்தும், கூட்டத்தில் அவர் அநாகரிகமாக பேசியது குறித்தும், நியாயம் கேட்டு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த கட்சிக்காரர்களை குண்டர்களை வைத்து தாக்கிய சம்பவம் குறித்தும் புகார் செய்வது எனவும், அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோன், கே.வி.தங்கபாலு, செல்வப்பெருந்தகை, கிருஷ்ணசாமி ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேற்று முன்தினம் இரவு அவரது இல்லத்துக்கு சென்று மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, கே.எஸ்.அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும், அவரை உடனடியாக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்தும் புகாராக தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. மேலும், சோனியா காந்தியை சந்திக்கவும் முயற்சித்தனர். இவர்களை தொடர்ந்து, நேற்று காலை அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்பியுமான விஸ்வநாதனும், மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறித்து, டெல்லி தலைமைக்கு அடுக்கடுக்கான புகார் சென்றுள்ளதால், அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் புதிய தலைவரை தேர்வு செய்யவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலிட சந்திப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: சொந்த கட்சியினரை குண்டர்களை வைத்து தாக்குவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றை மல்லிகார்ஜூன கார்கேவிடம், சொல்லியிருக்கிறார்கள்.அவரும் கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதனால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.
* அறிக்கை அனுப்பிய தினேஷ் குண்டுராவ்
சத்திய மூர்த்தி பவனில் நடந்த மோதலின்போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போதுதான் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் மீது கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் குண்டுராவ் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையாக தயார் செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையின் மீது விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.