கோவிட்-19 நிமோனியா தொற்று காரணமாக உலகளவில் 66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 66.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதுமே முடங்கியது. 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முழுவதுமாக முடிந்தபாடில்லை. இன்னமும் நாம் கொரோனா பரவல் செய்திகளைக் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வுக்கு, நிமோனியா(Pneumonia) பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
நிமோனியாவை பற்றி காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா விளக்குகிறார்.
“நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கும் தொற்று. குறிப்பாக காற்றில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்து எடுக்கும் alveoli என்னும் பகுதியில் ஏற்படும் பாதிப்பு. பொதுவாக நிமோனியா எந்தவித கிருமித்தொற்றினாலும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நிமோனியாவை ஏற்படுத்தும் பரவலான கிருமிகளில் ஒன்றாக தற்போது கோவிட் வைரஸும் இணைந்துள்ளது. உலகம் முழுவதும், கோவிட்-19 வைரசை தவிர, Pneumococcus, Hemophilus influenzae போன்ற பாக்டீரியாக்களாலும், Influenza A மற்றும் B போன்ற வைரஸ்களாலும் நிமோனியா ஏற்படுகிறது.