16 வார கர்ப்பத்தில் ப்ளீடிங் ஏற்பட, பயப்படத் தேவையில்லாத காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் நிறைய ரத்த நாளங்கள் இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது இவை சற்று வீங்கலாம். அதன் காரணமாக லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். அது பயப்பட வேண்டிய விஷயமல்ல.
சிலருக்கு கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருக்கலாம். அதனாலும் ப்ளீடிங் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது செர்விக்ஸ் பகுதி பாதிக்கப்படுவதன் விளைவாகவும் ப்ளீடிங் இருக்கலாம்.
இரண்டாவது ட்ரைமெஸ்டரில் நஞ்சுக்கொடி கீழே இறங்கியிருக்கிறதா, அதன் காரணமாக ப்ளீடிங் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது கர்ப்பப்பை வாய்ப்பகுதியின் மேல் நஞ்சுக்கொடி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதை ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது சற்றே ஆபத்தான நிலைதான். நஞ்சு கீழேயே இருப்பது மூன்றாவது ட்ரைமெஸ்டரிலும் தொடர்ந்தால் ரத்தப்போக்கு அதிகரிக்கலாம்.
அடுத்த நிலை நஞ்சு பிரிதல். உயர் ரத்த அழுத்தம், அடிபடுதல் காரணமாக சிலருக்கு நஞ்சு பிரியலாம். இதன் விளைவாக ப்ளீடிங்கும், கூடவே கடுமையான வலியும் இருக்கும். இதுவும் ஆபத்தான விஷயம் என்பதால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
உங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து திட்டுத்திட்டாக ப்ளீடிங் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதற்கு கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பே காரணமாக இருக்கக்கூடும். அதை நீங்கள் ஸ்கேன் மூலம் உறுதிசெய்துள்ளீர்களா என்பது முக்கியம்.
சிலருக்கு கர்ப்பப்பை வாய்ப்பகுதியானது சிறுத்துக் கொண்டே போகலாம். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். வழக்கமாக 5 மாதங்களுக்குள் ஏற்படும் இத்தகைய வலியை அபார்ஷன் என்பதாகவே அணுகுவோம். இந்நிலையில் கர்ப்பப்பைவாய்ப் பகுதியின் நீளத்தை மருத்துவரின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நீளம் சாதாரணமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை கர்ப்பப்பை வாய்ப்பகுதியானது பலவீனமாக இருந்தால் முதுகுவலி, லேசான ரத்தப்போக்கு, ஏதோ ஓர் அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம். மருத்துவரை அணுகும்போது கர்ப்பப்பை வாய்ப்பகுதியானது சிறியதாக இருப்பதையும், முன்கூட்டியே பிரசவம் நிகழலாம் என்பதையும் சொல்வார்.