மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் உரத் தட்டுப்பாடு காரணமாக, பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா நடவு செய்யும் விவசாயிகள் நடவு செய்த 15 நாட்களுக்குள் அடி உரமும், அதன் பிறகு 15 நாள் இடைவெளியில் மேலுரமும் இடுவது வழக்கம். தற்போது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயி அன்பழகனிடம் பேசியபோது, “பயிர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய நைட்ரஜன் சத்து நிரம்பிய யூரியா மற்றும் மணிச்சத்தை வழங்கும் பொட்டாஷ், கூட்டு உரமான டி.ஏ.பி உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு மூட்டை பொட்டாஷ் உரம் ரூ. 1,700 என்று அரசாங்கம் விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஒருசில தனியார் கடைகளில் மட்டும் ரூ 1,900 வரை பொட்டாஷ் உரம் விற்பனை செய்யப்படுகிறது.

பொட்டாஷ் உரம் மற்றும் 500 ரூபாய்க்கு பயிர் ஊட்டச்சத்து வாங்கினால் மட்டுமே 300 ரூபாய் பெறுமானமுள்ள யூரியா வழங்கப்படுகிறது. அடி உரமாக யூரியா, பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி கலந்து விட வேண்டும். ஒரே இடத்தில் மூன்று உரங்களும் கிடைப்பதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் பலனில்லை. இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்து, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது” என்றார்.
விவசாயிகளின் புகார் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகரிடம் விளக்கம் கேட்டோம். “யூரியா இருப்பு உள்ளது. இந்த மாதத்திற்கு வரவேண்டிய பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி . உரங்கள் மட்டும் வரவில்லை. டி.ஏ.பி.க்கு பதிலாக காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பிலிருக்கு. தேவையான உரங்களைப் பெற்று தருவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கையும் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.