சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசுகையில் `SKY is the Only Limit to Him’ என பலரும் வர்ணிப்பார்கள். ஆனால், இந்திய அணியில் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பார்க்கையில் வானம்கூட அவரின் எல்லையாக இருக்காது போல. வானத்தையே கிழித்தெறிந்து கொண்டு பறக்கும் விநோத சக்தியுடைய சூப்பர் மேனாகத்தான் சூர்யகுமார் யாதவ் தெரிகிறார். அந்தளவுக்கு இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிலும் வெற்றியிலும் அவரின் பங்கு பெரிதாக இருக்கிறது.
வெகுசமீபத்தில்தான் ஐ.சி.சியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை சூர்யா பிடித்திருந்தார். அத்தோடு நின்றுவிடாமல் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரராகவும் சாதனை படைத்திருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் டி20 போட்டிகளில் 1026 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் என்பதே பெரும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், கடந்த ஆண்டில் இதே சாதனையை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் செய்திருந்தார். 2021-ம் ஆண்டில் மட்டும் அவர் 1300+ ரன்களை எடுத்திருந்தார். ஆக, ஆயிரம் ரன்களைத் தொடுவதென்பது ஏற்கெனவே எட்டப்பட்ட சாதனைதான்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எதுவெனில் சூர்யகுமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட்டே. 1026 ரன்களை 186 ஸ்ட்ரைக் ரேட்டில் எட்டியிருக்கிறார். இதுதான் ஆச்சர்யமே!
சூர்யகுமார் யாதவ் டாப் 3-க்குள் ஆடும் வீரர் இல்லை. அதனால் பல சமயங்களில் அவருக்கு அந்த பவர்ப்ளே என்கிற இயல்பான சௌகரியம் கிடைப்பதில்லை. மேலும், சூர்யா முழுக்க முழுக்க ஹார்ட் ஹிட்டிங் ஆட்டத்தை மட்டுமே வரிந்து ஏற்றுக் கொள்ளும் அவசியம் கொண்ட ஃபினிஷர் ரோலில் ஆடக்கூடியவரும் இல்லை. சூர்யகுமார் நம்பர் 4 இல் இறங்கி பெரும்பாலான சமயங்களில் மிடில் ஓவர்களிலேயே ஆடுகிறார். இந்த ஆண்டில் 1026 ரன்களைச் சேர்க்க சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 550 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த 550 பந்துகளில் 361 பந்துகளை 7-16 என்கிற இந்த மிடில் ஓவர்களிலேயே எதிர்கொண்டிருக்கிறார். ஆக, ஒட்டுமொத்தத்தில் அவர் 65.6% சதவிகிதத்திற்கு மிடில் ஒவர்களிலேயே ஆடியிருக்கிறார். டி20 போட்டிகளிலுமே மிடில் ஓவர்கள் என்பது பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ளும் இடமாகவே இருக்கிறது. இந்தக் கட்டத்தில் அணியின் ரன்ரேட் கொஞ்சம் விழும். அதைப்பற்றி கவலைப்படாமல் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்வார்கள். டெத் ஓவர்களில் அதிரடி காட்டுவார்கள். சூர்யகுமார் யாதவ் இந்த விஷயத்தில்தான் தனித்து தெரிகிறார்.
அவர் மிடில் ஓவர்களில் எதிர்கொண்டிருக்கும் 361 பந்துகளில் மட்டும் 653 ரன்களை எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 180. மிடில் ஓவர்களில் இப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை ஆடும் பேட்ஸ்மேன்கள் டி20 வரலாற்றிலேயே ரொம்பவும் குறைவுதான்.
இந்த வகையில் சூர்யகுமாரை ஒரு அரிய வீரராகவே மதிப்பிடலாம். இந்த மதிப்பீடை கன்சிஸ்டன்சி என்கிற விஷயத்தையும் மனதில் வைத்தே கொடுக்கலாம். பயங்கரமாக அதிரடியாக ஆடும் வீரர்கள் சறுக்கும் இடம் ‘கன்சிஸ்டன்சியே’. அதிரடியாக ஆடுவார்கள். ஆனால், சீராக ஸ்கோர் செய்யமாட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக பெர்ஃபார்ம் செய்து வைப்பார்கள். ஆனால், சூர்யா இதிலும் கெட்டிதான்! இந்த ஆண்டில் மட்டும் 28 இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருக்கிறார். இந்த 28 இன்னிங்ஸ்களில் 2 இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகியிருக்கிறார். 3 இன்னிங்ஸ்களில் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகியிருக்கிறார். இவற்றைத் தவிர்த்து பெரிதாக மோசமென்று சொல்லும் அளவுக்கான பெர்ஃபார்மென்ஸாக எதுவுமே இல்லை.

சுருங்கச் சொன்னால் 10 போட்டிகளில் களமிறங்கினால் 8 போட்டிகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வீரராகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.
இவ்வளவு ரன்களை ஸ்கோர் செய்திருக்கிறார் எனும்போது இந்த எண்களுக்கு ஊடாகவும் நாம் பயணித்து பார்க்க வேண்டும். சூர்யகுமார் யாதவின் இந்த ஆண்டு ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 186. அதில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 201 ஆக இருக்கிறது. அதேநேரத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 160 ஆக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான அவரின் ஸ்ட்ரைக் ரேட்டோடு ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை ஒப்பிட்டுப் பார்த்தால் அது குறைவு போன்றே தோன்றும். ஆனால், தனியாகப் பார்த்தால் 160 என்கிற இந்த ஸ்ட்ரைக் ரேட்டே பிரமாதமானதுதான். எந்தவிதமான பௌலர்களுக்கு எதிராகவும் சூர்யகுமார் தயக்கம் காட்டுவதே இல்லை. எல்லா பௌலர்களுக்கு எதிராகவும் அட்டாக்தான்!
ஜிம்பாப்வேயிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டியிருந்தார். 25 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 244. ஜிம்பாப்வேயின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஃபுல் டாஸ்களை அநாயாசமாக வெளியே பறக்கவிட்டிருந்தார். இந்த உலகக்கோப்பையில் மட்டுமே அவரின் பெர்ஃபார்மென்ஸை எடுத்து அளவிட்டு பார்த்தாலும் அது மதிப்புமிக்கதாகவே இருக்கிறது.
இந்த உலகக்கோப்பையில் மட்டும் இதுவரை மொத்தமாக 116 பந்துகளை எதிர்கொண்டு 225 ரன்களை எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 193.
சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசும்போது இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை எப்படியிருந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசியாக வேண்டும். இந்த உலகக்கோப்பையில் எடுத்த உடனேயே அதிரடி எனும் அணுகுமுறையை இந்திய அணி கைக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக முதல் 10 ஓவர்களை நின்று நிதானமாக எதிர்கொண்டுவிட்டு இரண்டாம் பாதியில் வீசப்படும் 10 ஓவர்களிலேயே கியரை மாற்றுகின்றனர்.
இதன் காரணமாக முதல் 10 ஓவர்களில் சராசரியாக இந்திய அணியின் ரன்ரேட் 6.7 ஆக மட்டுமே இருக்கிறது. அதேநேரத்தில் அடுத்த 10 ஓவர்களில் சராசரியாக இந்திய அணியின் ரன்ரேட் 10.1 ஆக இருக்கிறது.

இருபாதி ஆட்டங்களும் அப்படியே வெவ்வேறானவையாக இருக்கின்றன. இரண்டாம் பாதியில் இந்திய அணியின் ரன்ரேட் ஓர் உச்சத்தைத் தொடுவதற்கு மிக முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவே!
ஜிம்பாப்வேக்கு எதிராக சூர்யகுமார் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது கமென்ட்ரியில் சூர்யாவின் பேட்டிங்கை பற்றி கவாஸ்கர் ‘Toying With the Balls’ என வர்ணித்திருந்தார். அதாவது, ரொம்பவே இலகுவாக துளி கூட சிரமமின்றி தன்னுடைய விருப்பத்திற்கு பந்துகளை எங்கும் விளாசித் தள்ளுகிறார் என்பதே இதன் பொருள்.
இதே இலகுவோடு சூர்யா நாக் அவுட்டிலும் இந்திய அணிக்காக சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.