இந்தியாவுக்கு இதெல்லாம் புதியதில்லை… வரும் ஓவர்களில் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் அடுத்த ஓவர் முடிவில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி.
ஆஸ்திரேலியாவின் அழையா விருந்தாளியான மழை இங்கும் வந்துவிட்டார். சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசம் DLS முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனால் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதுதான் இந்தியாவுக்கு அப்போது இருந்த இடியாப்பச் சிக்கல். ஆனால் ஒரு வழியாக மழை இரக்கம் காட்ட, DLS முறைப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் என்று இலக்கு மாற்றப்பட்டது. மழை நின்று ஆட்டம் தொடங்கிய முதல் பந்தியிலேயே வழுக்கி விழுந்தார் லிட்டன் தாஸ். அடுத்த பந்தில், ராகுலின் துல்லிய த்ரோவால் ரன் அவுட் ஆனார். மைதானம் ஆட்டத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்பது போல நடுவரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டே பெவிலியன் சென்றார். கூடவே வங்கதேச அணியின் வெற்றிக்கான வாய்ப்பும் சென்றுவிட்டது.
இந்த விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டத்தை மிக வேகமாகவே தங்கள் பக்கம் இந்திய அணி திருப்பி விட்டது. அதுவும் குறிப்பாக அர்ஷ்தீப் ஒரே ஓவரில் இரண்டு விக்கெடுகளை எடுக்க கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதியானது. கடைசி கட்டத்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் சிறிது பயம் காட்டினாலும் 20 ரன்களை எளிமையாகக் கட்டுப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் அர்ஷ்தீப் சிங். இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.