ஊடகத்தினரை இழிவுபடுத்தும் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது: திமுக செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்

Share

சென்னை: ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பாஜ தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று(நேற்று) மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்டபோது, மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கும் வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, ஆளுந்தரப்பை விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது, பா.ஜ.வினர் எந்தளவுக்குத் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியதை இங்கு நினைவு கூர்கிறேன். அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி, ஊடகத்தினரிடமும் தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலையின் தொடர்ச்சியான வாய்ச் சவடால் மூலமாகத் தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் வேலையை பா.ஜ. மேற்கொண்டு வருகிறது. ஊடகத்தினரை இழிவுபடுத்திய பா.ஜ.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தன் செயலுக்காக ஊடகத்தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்து, இனியாவது நாகரிகமும் பண்பாடும் காத்திட வலியுறுத்துகிறேன்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com