பட மூலாதாரம், AFP via Getty Images
-
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பிபிசி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
செளதி அரேபியா தற்போது ஒரு குழப்பமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து, அதில் நேரடியாக ஈடுபடாமல் இருக்கவே செளதி அரேபியா பெரும்பாலும் முயற்சித்து வந்தது.
ஆனால், தற்போது மூன்று திசைகளில் இருந்து தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாகக் கருதும் செளதி அரேபியா, இனி பொறுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளது. இந்த வாரம், செளதி அரேபியா மீது டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக நம்பப்படும் இராக்கிலுள்ள இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது, அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
செளதி அரேபியாவுக்கு இப்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க பதிலடி நடவடிக்கைகளைத் தொடர்வதா அல்லது பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் தனது எதிரிகளுடன் சமரச முயற்சிகளில் ஈடுபடுவதா என்பதுதான்.
யார் யாரைத் தாக்குகிறார்கள்? ஏன் இந்த மோதல் உருவாகியுள்ளது?
முதலில், இதன் பின்னணியைப் பார்ப்போம்.
கடந்த ஐந்து மாதங்களாக வளைகுடா பிராந்தியம் மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளைப் பாதித்து வரும் இந்த மோதலில், பொதுவாக இரண்டு தரப்புகள் உள்ளன.
ஒருபுறம் இரானும் அதன் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் உள்ளன. அவர்களுடன் கூட்டணியில், 2014-ஆம் ஆண்டு ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹூத்திக்கள் உள்ள்ன.
அதேபோல், இரானின் ஆதரவைப் பெறும் இராக்கின் பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்சஸ் என்ற அமைப்பும் இந்த அணியில் இடம்பெறுகிறது. இந்த அமைப்பே செளதி அரேபியா மீது சுமார் 30 டிரோன் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது செளதி அரேபியா மற்றும் அமெரிக்காவின் பதிலடி தாக்குதலுக்கும் இந்த அமைப்பு இலக்காகியுள்ளது.
மேலும், லெபனானில் செயல்படும் ஹெஸ்பொலா அமைப்பும் இரான் ஆதரவு அணியில் உள்ளது. அது இன்னும் வலுவான சக்தியாக இருந்தாலும், தற்போது நேரடி மோதல்களில் ஈடுபடாமல் ஒதுங்கிய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Reuter
எதிர்புறம் யார்?
இந்த மோதலின் மறுபுறத்தில் அமெரிக்கா உள்ளது. அதன் சக்திவாய்ந்த மத்திய கட்டளையான சென்ட்காம் மற்றும் பல்வேறு அளவுகளில் வளைகுடா அரபு நாடுகள், ஜோர்டான் ஆகியவை அதனுடன் இணைந்துள்ளன. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தாலும், இப்போரில் இஸ்ரேல் தற்போது நேரடியாக களத்தில் இல்லை.
அண்மைக் காலமாக, ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதில் இரான் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், இரான் விதித்துள்ள புதிய விதிமுறைகள் மற்றும் கடல் வழித்தடங்களைப் பின்பற்றாமல் ஹார்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல முயலும் வணிகக் கப்பல்களையும் அது குறிவைத்து வருகிறது.
இராக்கிய ஆயுதக் குழுக்களும், ஏமனில் உள்ள ஹூத்திகளும் இந்த மோதலில் தீவிரமாக இணைந்திருப்பது ஒப்பீட்டளவில் சமீபத்திய முன்னேற்றமாகும். அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நீடித்த அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்தப் பிராந்தியம் மேலும் விரிவடையும் மோதலில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதை இது காட்டுகிறது.
முழுமையான போர் சூழலுக்குள் இழுக்கப்படாமல் இருக்க செளதி அரேபியா முயற்சிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
அந்த நாட்டின் நடைமுறை ஆட்சியாளரான இளவரசர் முகமது பின் சல்மான், “விஷன் 2030” என்ற பெயரில் ஒரு விரிவான மாற்றுத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
எண்ணெய் வருவாயை மட்டுமே சார்ந்திருக்கும் பொருளாதார அமைப்பிலிருந்து நாட்டை மாற்றி, நவீன மற்றும் பல்துறை உள்நாட்டு தொழில்களை உருவாக்குவதே அவரது நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் இணையும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.
“விஷன் 2030” திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாகும். அதேபோல், தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகக்கூடிய தரவு மையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளையும் உருவாக்குவது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஏமனில் உள்ள ஹூத்திகள் தெற்கு எல்லை வழியாக டிரோன்களை ஏவுவதோ, அல்லது இரான் நேரடியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதோ போன்ற நீண்டகால அச்சுறுத்தல்களுக்கு செளதி அரேபியா தொடர்ந்து உள்ளாகும் நிலை ஏற்பட்டால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படக்கூடும்.
2019 செப்டம்பரில் செளதி அரேபியா ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை எதிர்கொண்டது.
அப்போது இரானுடனான உறவுகள் மோசமான நிலையில் இருந்தன. அந்தச் சூழலில், இராக்கில் செயல்பட்ட இரான் ஆதரவு ஆயுதக் குழு ஒன்று, அப்கைக் மற்றும் குரைஸ் ஆகிய செளதியின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
அந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹூத்திகள்தான் காரணம் என்ற கருத்து அப்போது முன்வைக்கப்பட்டது. ஆனால், சம்பவத்துக்குப் பிறகு அந்த இடத்துக்கு நான் சென்றபோது, கட்டமைப்புகளில் ஏற்பட்டிருந்த சேதங்கள் அனைத்தும் வடக்கு நோக்கிய திசையில் இருந்ததை நேரடியாகக் காண முடிந்தது.
இந்தத் தாக்குதலால், செளதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் பாதி அளவு பல நாட்களுக்கு பாதிக்கப்பட்டது. மேலும், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்குதல்களுக்கு எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவை என்பதை நாட்டின் தலைமைக்கு உணர்த்திய எச்சரிக்கை மணியாகவும் அது அமைந்தது.
இந்த வார திங்கள்கிழமை வெளியான செயற்கைக்கோள் படங்களிலும், அப்கைக் எண்ணெய் நிலையம் மீண்டும் டிரோன் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இந்தத் தாக்குதல்களுக்கு இராக்கில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களே காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், எண்ணெய் இன்னமும் செளதி அரேபியாவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகவே உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, இரான் ஹார்மூஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முடக்கியது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த முக்கிய கடல் வழித்தடத்தின் மூலமே நடைபெறுகிறது. இரானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள இந்த நீரிணையின் செயல்பாடு பாதிக்கப்பட்டது, உலக எரிசக்தி சந்தைகளிலும் கவலையை ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
செளதி கவலை என்ன?
இதற்கு பதிலடியாக, செளதி அரேபியா தன்னால் முடிந்த அளவுக்கு அதிக எண்ணெயை, நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை கிழக்கு- மேற்கு குழாய் வழியாக தனது மேற்குக் கடற்கரையில் உள்ள யான்பூ ஏற்றுமதி முனையத்துக்கு அனுப்பியது.
அங்கிருந்து எண்ணெய் கப்பல்களில் ஏற்றப்பட்டு, செங்கடல் வழியாக தெற்கே சென்று, அரபிக்கடலைக் கடந்து ஆசிய சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது.
ஆரம்பத்தில் இந்தத் திட்டம் சுமுகமாகச் செயல்பட்டது.
ஆனால், ஜூலை 13 அன்று ஏமன் தலைநகர் சனாவுக்கு அருகில் உள்ள விமான நிலையத்தின் மீது செளதி அரேபியா தாக்குதல் நடத்தியது. இரான் விமானம் ஒன்று அங்கு தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, செளதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக, ஹூத்திகள் செளதி அரேபியாவின் அப்ஹா மற்றும் ஜிசான் பிராந்திய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதைக் காட்டிலும் ரியாத்தை அதிகம் கவலைக்குள்ளாக்கியது, செங்கடலில் செளதி அரேபியாவின் கப்பல் போக்குவரத்தை ஹூத்திகள் குறிவைக்கத் தொடங்கியதுதான். இதனால், செங்கடலின் தெற்கு முனையில் உள்ள குறுகலான பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
அதன் விளைவாக, ஆசிய நாடுகளுக்கான செளதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்படுகிறது.
ஹூத்திக்களுக்கு எதிராக செளதி அரேபியா ஏழு ஆண்டுகள் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
ஏமனை உலுக்கிய போர், நம் காலத்தின் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தாக்கங்கள் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
2022-ஆம் ஆண்டு, ஹூத்திகளுடன் செளதி அரேபியா ஒரு நிலையற்ற சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. சில சமரச ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது, பிராந்தியத்தின் மிகப் பணக்கார நாடான செளதி அரேபியா, தெற்கில் ஏமனில் இருந்து வரும் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலையும், வடக்கில் இராக்கில் இருந்து வரும் தாக்குதல்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவற்றில் எதுவுமே “விஷன் 2030” திட்டத்தின் ஆரம்பக் கணிப்புகளில் இடம்பெறவில்லை.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு