சென்னை: இந்தியக் கடற்படையே இந்திய மீனவர்களைத் தாக்குவதா என்று தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: இருதினங்களுக்கு முன் இந்தியக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களைப் பாதிக்காமல், படகை நோக்கி சுடாமல், எச்சரிக்கை செய்ய சுட்டிருக்கலாம். அதை விடுத்து குறி பார்த்து மீனவர்களை சுடுவது எப்படி எச்சரிக்கை செய்வதாக அமையும். இதற்கு ஒன்றிய மோடி அரசு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட கடற்படையின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு ஒன்றிய அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.