மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே காவல்துறையின் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், கரூர் மாவட்ட காவல்துறை முயற்சி செய்தது. அப்படி கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 40 மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகம் வரவழைக்கப்பட்டு, ஆயுதக் கிடங்கு, மோப்பநாய் படைப் பிரிவு ஆகிய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கப்பட்டனர்.
அங்கிருந்த நாயைப் பார்த்ததும் உற்சாகமான மாணவர்கள், ‘ஹைய்… எங்களுக்கு நாய்ன்னா உயிர்’ என்று குதூகலமடைந்தனர். காவல்துறையினரின் வழிகாட்டுதலோடு, மோப்ப நாயும் மாணவர்களோடு அளவளாவி, அவர்களின் அன்பு மழையில் நனைந்தது. தொடர்ந்து அவர்களுக்குப் பல்வேறு விதமான ஆயுதங்கள் பற்றியும், அவற்றை இயக்கும் விதங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. குற்றச் சம்பவங்கள் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றியும் விளக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு வீர வணக்க சின்னம் காண்பிக்கப்பட்டு, வீர வணக்க நாளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காவலர் வீர வணக்கம் நாள் அனுசரிப்பதின் நோக்கம் மற்றும் பணியில் உயிர் நீத்த தியாகிகள் பற்றியும் மாணவ மாணவிகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதையடுத்து, மாணவ, மாணவிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களைச் சந்தித்து உரையாடினர். அப்போது, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், மாணவர்கள் வழங்கினர்.