குறிப்பிட்ட இந்த வழக்கு என்ன?
ஐதராபாத் கூட்டு பாலியல் வழக்கில், காவல்துறையின் தகவலின்படி, மே 28-ம் தேதி, 17 வயது சிறுமியொருவர், தனது நண்பருடன் பார்ட்டியொன்றுக்கு சென்றபோது, அங்கிருந்த ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அந்த நபர்கள், அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, மறைவான ஓர் இடத்திற்கு அச்சிறுமையை கடத்திச்சென்று, அங்கு வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இந்த வன்கொடுமை குறித்து, அச்சிறுமி தன் பெற்றோரிடம் மே 31-ம் தேதி தெரிவித்துள்ளார். அதன்பின் பெற்றோர் உதவியுடன் காவல்துறையிடம் புகார் அளித்து, வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக கைதான ஆறு பேரில், 5 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. இவர்களில் ஒரு சிறுவன், எம்.எல்.ஏ ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அந்த எம்.எல்.ஏ தன் மகனுக்கும் இந்த குற்றத்துக்கும் தொடர்பில்லை எனக் கூறிய நிலையில், பின்னர் அது நிரூபிக்கப்பட்டதால், காவல்துறையினர் அச்சிறுவனின் பெயரையும் குற்றவாளிகள் பெயரில் சேர்த்துக் கொண்டனர். ஐதராபாத் சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கைதான ஆறு பேரும் இனி பெரியவர்களாக கருதப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– இன்பென்ட் ஷீலா