ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மாநில அரசு நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கவேண்டும் என்று கோரி நேற்று அம்பாலா – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குருஷேத்ரா அருகில் உள்ள சஹாபாத் என்ற இடத்தில் இந்த போராட்டத்தை பாரதீய கிஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி-சண்டிகர் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இரவு முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்னை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நள்ளிரவு வரை நடந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும், கடைசி வாய்ப்பாக போலீஸ் படையை பயன்படுத்தும் படியும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
மாநில அரசு தரப்பில் விவசாயிகள் கொண்டு வந்து மார்க்கெட்டில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் உடனே அங்கிருந்து கொண்டு செல்லப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. மார்க்கெட்டில் நெல் மூட்டைகள் பல நாட்களாக சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் ஈரப்பதம் காரணமாக சேதமாகிக்கொண்டிருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு தரப்பில் இந்த உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.