சென்னை: காய்ச்சலால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 நாளில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று சுகாதாரத் துறை ஆறுதல் கூறுவது போதுமானதல்ல. காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர். புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி அவசியம், அவர்களின் உடல் நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். எனவே, 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.