Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பாக இருக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் என்கிறார்களே…. அதுதானா? ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது இந்நிலையில் அவசியமா? எந்த வயதில் போட்டுக்கொள்ள வேண்டும்? இது ஃப்ளூதானா அல்லது கொரோனாவா என வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
இன்ஃப்ளுயென்ஸா என்பதன் சுருக்கமே ஃப்ளு. இது ஒருவகையான வைரஸ் தொற்று. சளி, காய்ச்சல் பாதிப்பு என பேச்சுவழக்கில் சொல்வது இந்த ஃப்ளுவை தான் குறிக்கும். சீதோஷ்ணநிலை மாறும்போது, அதாவது வெயில் குறைந்து மழையும் பனியும் வரும்போது இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான்.
பெரும்பாலும் இந்த ஃப்ளு காய்ச்சலானது பலரையும் பாதித்து, தானாகவே சரியாகிவிடும். ஆனால் எதிர்ப்புசக்தி குறைவானவர்களே இதன் தீவிரத்தால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேலானவர்கள், நீரிழிவு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயநோய்கள் போன்று எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய நாள்பட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கு ஃப்ளு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்து, நிமோனியாவாக மாற வாய்ப்புகள் உண்டு.