சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கை பார்த்து தாங்கி கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மின்கட்டணம் உயர்வு குறித்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்து பேசியிருக்கிறார். கொட நாடு வழக்கு மிகவும் சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கொட நாடு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பயப்படுவதற்கு காரணம், அவரின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும்.
கொடநாடு வீடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு. அங்கு வெறும் கொள்ளை நடைபெற்றிருந்தால் கூட சாதாரண வழக்காக பார்க்கலாம். ஆனால் பல்வேறு கொலைகள் நடைபெற்றுள்ளது. அதனால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயம் தவறு செய்தவர்கள், சிறை செல்வார்கள். இவர்கள் தான் 15 மாத திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்று விமர்சிக்கிறார்கள். இன்று அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்கள் பலரும், திமுக அரசு அறிவித்த இலவச பேருந்தில் தான் வந்திருப்பார்கள். திமுகவில் 4 முதல்வர்கள் என்று கூறுகிறார்.
ஆனால் அதிமுகவில் தான் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், சசிகலா மற்றும் இபிஎஸ் என்று 4 தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் அதிமுகவை கைப்பற்ற போட்டி போடுகிறார்கள். அதனை மனதில் வைத்து திமுகவை விமர்சிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவதை தொடர்ந்தால் திமுகவும் தெருதெருவாக தெருமுனைக் கூட்டங்களை கூட்டி பதிலளிக்க தயங்காது. எந்த துறையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அனைத்தையும் திவாலாக்கிவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான் ஆட்சி பொறுப்பை ஏற்று இவ்வளவு சிறப்பாக முதல்வர் பணியாற்றுகிறார். இதையெல்லாம் மூடி மறைக்கவே எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுகிறார். இப்படியே அவர் புலம்பிக் கொண்டிருந்தால் மெண்டல் ஆஸ்பிடலுக்கு போக வேண்டியது தான். இவ்வாறு அவர் கூறினார்.