
பட மூலாதாரம், @SilambarasanTR_/twitter
வெந்து தணிந்தது காடு
இந்த வாரம் திரையரங்குகளில் மூன்று தமிழ் படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஓடிடி தளங்களில் வழக்கம் போல சில குறிப்பிடத்தக்க படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்?
01. வெந்து தணிந்தது காடு
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, இஷா பத்நானி நடித்து உருவாகியுள்ள இந்தப் படம் வியாழக்கிழமையன்றே வெளியாகிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள இளைஞன் மும்பைக்குச் சென்று, தாதாவாக மாறுவதுதான் கதை. இரு பாகங்களைக் கொண்ட தொடரில் இது, முதல் பாகம். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.
இதனிடையே ரசிகர்களுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார்.
“படம் வெளியாகும் முதல்நாள் முதல் (காலை 5 மணி) காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வர வேண்டும். ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. படத்தின் ரிசல்டை முன்கூட்டியே இயக்குநர் கூறிவிட்டதாக நெட்டிசன்கள் கேலி செய்த நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் விளக்கமும் கொடுத்துள்ளார்.
“பொதுவாக அதிகாலை வேலைக்கு செல்பவர்கள் அதிகாலை பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் இரவு நன்கு தூங்கினால் அவர்களின் வேலையோ, பயணமோ நன்றாக இருக்கும். அந்த தொனியில் நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.
02. சினம்
ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சினம். தன் மனைவியைக் கொன்றவனை, காவல்துறை அதிகாரியான கதாநாயகன் எப்படிக் கண்டுபிடிக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதுதான் கதை. ஒரு பழிவாங்கல் த்ரில்லர். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் மிகச் சாதாரணமாக இருப்பதால், பல எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது இந்தப் படம்.
03. டூடி
கார்த்திக் மதுசூதனன் இயக்கத்தில் கார்த்திக் மதுசூதனன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி போன்றவர்கள் நடித்திருக்கும் படம் இது. காதலே பிடிக்காமல் இருக்கும் நாயகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் நாயகி. பிறகு, நாயகனும் காதலிக்க ஆரம்பிக்கும்போது, தான் ஏற்கனவே ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை. இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
04. Sakini, Dakini
இது ஒரு தெலுங்குப் படம். சுதீர் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நிவேதிதா தாமஸ், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். தெலங்கானாவில் ஷாலினியும் தாமினியும் காவல்துறை பயிற்சியில் இருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் கடத்தப்படுவதைப் பார்க்கிறார்கள். உள்ளூர் காவல்துறையின் உதவி கிடைக்காத நிலையில், தாங்களே அந்த முயற்சியில் இறங்குகிறார்கள்.
05. Siya
புதுமுக இயக்குநராக மனீஷ் முண்டா இயக்கியிருக்கும் படம். உத்தரப்பிரதேசத்தின் தேவ்கன்ஞ் மாவட்டத்தில் பலரால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண், மீட்கப்பட்ட பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர போராடுகிறார். இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. இந்தித் திரைப்படம்.
06. Jogi
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருக்கும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. 1984ஆம் ஆண்டு கலவரத்தைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படம். மூன்று நண்பர்கள் கலவரத்திலிருந்து தங்கள் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றுவருகிறது.
இவை தவிர, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான பல படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. மலையாளப் படமான ‘அட்டென்ஷன் ப்ளீஸ்’ நெட்ஃப்ளிக்சில் வெளியாகியிருக்கிறது. ரவிதேஜா நடித்த தெலுங்குப் படமான ராமாராவ் ஆன் டியூட்டி சோனி லைவ் ஓடிடியில் எல்லா தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு த்ரில்லரான Kerosene ஆஹா ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. மலையாளப் படமான Thallumaala நெட்ஃப்ளிக்சில் எல்லா தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.
சினிமா துணுக்குகள்:
இந்தியன் 2
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் 2’என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா தாக்கம், இயக்குநருக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாகவே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் தெலுகு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க தொடங்கினார்.
- சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பையும் தற்போது துவங்கியுள்ளார் ஷங்கர். ஒரே சமயத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு மாறி மாறி நடைபெறும் என்பதையும் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
- இந்தியன் 2 படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவியாக இப்படம் முழுவதும் உறுதுணையாக பணியாற்றும் விதமாக அவருடைய மூன்று முன்னாள் உதவி இயக்குனர்கள் தற்போதைய இயக்குநர்களான வசந்தபாலன், அறிவழகன், சிம்புதேவன் ஆகியோர் இப்படத்தில் இயக்குநர் ஷங்கருடன் இணைந்துள்ளனர் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இயக்குநர் வசந்தபாலன் மட்டும் இந்தியன் படம் எடுக்கப்பட்ட சமயத்திலேயே இயக்குனநர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி
பட மூலாதாரம், Getty Images
- ‘பொன்னியின் செல்வன் – 1’, ‘வெந்து தணிந்தது காடு’ என அடுத்தடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்க மறுபுறம் பல நாடுகளில் இசைக் கச்சேரியும் நடத்தி வருகிறார் சமீபத்தில் கூட அமெரிக்கவில் உள்ள ஹவுஸ்டன் நகரிலும் கனடாவிலும் இசை கச்சேரி நடத்திய ரஹ்மான் அடுத்ததாக மலேசிய செல்ல உள்ளார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் DMY creation என்கின்ற பட விநியோக நிறுவனம் சார்பில் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.
- இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation தலைவர் டாத்தோ முகம்மது யூசுஃப் சுமார் 10, 000 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
- இவ்வாறு பாரசூட்டில் இருந்து குதித்து வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை. இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.
நானே வருவேன்
- இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தயாரித்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷ் அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
- அதேபோல இயக்குநர் செல்வராகவன் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கான காட்சிகளும் வெளியிடப்பட்ட டீஸரில் இடம்பெற்றுள்ளது.
மல்டிபிளக்ஸ் டிக்கெட் ஒரு நாள் குறைப்பு
- கடந்த 2 ஆம் தேதி இந்திய முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் சங்கங்கள் ஒன்றினைந்து தேசிய சினிமா தினமான செப்டம்பர் 16-ல் மட்டும் அனைத்து வகையான இருக்கைகளுக்கும் டிக்கெட் விலை ரூ.75 என அறிவித்திருந்ததது.
- அந்நாளில் மட்டும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள சுமார் 4000 திரைகளில் டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என்று பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் தெரிவித்திருந்தனர்.
- இந்த சூழ்நிலையில், செப்.16 அன்று அறிவிக்கப்பட்டிருந்த ரூ.75-க்கு டிக்கெட் சலுகையை செப்.23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக மல்டிபிளக்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கடந்த வாரம் வெளியான ‘பிரம்மாஸ்திரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாலும் ‘வெந்து தணிந்தது காடு’ தற்போது வெளியாகி இருப்பதாலும் புதிய படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்தத் தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :